இந்தியா விரையும் குழு! இந்திய கடற்தொழிலாளர்கள் இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைய மாட்டார்கள் என்ற உத்தரவாதம் வேண்டுமென கோரிக்கை
இலங்கை - இந்திய கடற்தொழிலாளர்கள் பிரச்சினை குறித்து கலந்துரையாட இந்தியா செல்லும் குழுவினர் இனிவரும் காலங்களில் இலங்கை கடற்பரப்பிற்குள் இந்திய கடற்தொழிலாளர்கள் நுழைய மாட்டார்கள் என்ற உத்தரவாதத்தை பெற வேண்டும் என வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளரும், ஊடகப் பேச்சாளருமான என்.எம்.ஆலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று (05.09.2026) காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை - இந்திய கடற்தொழிலாளர்கள் பேச்சுவார்த்தை தொடர்பாக இந்தியா செல்லவிருக்கும் மீன்பிடி தொடர்பான அதிகாரிகள் மட்ட பேச்சுவார்த்தை நடைபெறவிருப்பதாக நேற்றைய தினம் கடற்றொழில் அமைச்சர் அவர்கள் தனது அறிவிப்பில் தெரிவித்திருக்கின்றார்.
நீண்டகாலமாக பேசப்பட்ட விடயம்
இந்த பேச்சுவார்த்தையில் நாங்கள் எதிர்பார்க்கும் விடயம் அதில் உள்வாங்கப்படுமா? குறிப்பாக, இந்திய - இலங்கை கடற்தொழிலாளர்கள் பிரச்சினை தொடர்பாக நீண்டகாலமாக எங்களால் பேசப்பட்ட விடயம்.
அது தொடர்பாக நீண்ட பேச்சுவார்த்தைகளை நாங்கள் நடத்தி இருந்த நிலையில் தான், தற்போது இருக்கின்ற அரசாங்கம் இரண்டு வருடங்கள் நெருங்கியிருக்கும் நிலையில் இந்த பேச்சுவார்த்தையை ஆரம்பிக்கலாம் என்ற கருத்தை, அமைச்சரின் கருத்தை நாங்கள் வரவேற்கின்றோம்.
அந்த வகையிலே, அதிகாரிகள் மட்டத்தில் பேசுவதற்கு செல்லுகின்ற அந்த குழுவானது, இலங்கையில் இருக்கின்ற குறிப்பாக வடக்கிலிருக்கின்ற கடற்தொழிலாளர்களின் பிரச்சினை எந்த அளவுக்கு புரிந்திருக்கிறது, அவர்களிடம் இது தொடர்பாக கருத்துக்கள் பெறப்பட்டதா என்பது கேள்வியாக இருக்கிறது.

ஒட்டுமொத்தமாக வடக்கிலிருக்கின்ற கடற்தொழிலாளர்களின் ஒரே குரலாக, இந்திய கடற்தொழிலாளர்கள் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும். அந்த கடற்தொழிலாளர்கள் எங்களது கடல் எல்லைக்குள் இந்திய படகுகள் அல்லது வெளிநாட்டு படகுகள் எங்களது கடலிலே தொழில் செய்வதை தடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை ஒட்டுமொத்த குரலாக எழுப்பி வருகிறார்கள்.
வழங்கவேண்டிய உத்தரவாதம்
கடற்றொழில் அமைச்சரின் தற்போதைய நடவடிக்கைகளை நாங்கள் பாராட்டுகிறோம். இருந்த போதிலும், இங்கு பேச சொல்கின்ற அதிகாரிகள் மட்ட குழுவானது, இந்திய கடற்தொழிலாளர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் நுழைய மாட்டார்கள் என்ற உத்தரவாதத்தை அவர்களால் வழங்கக்கூடிய அல்லது இந்தியாவால் பெறக்கூடிய நிலையில் அவர்களின் பேச்சு வார்த்தை அமையுமா? என்பது கேள்வியாக இருக்கிறது.
இந்த பேச்சுவார்த்தைக்கு அப்பால், கடற்தொழிலாளர்கள் மட்டத்தில் பேச்சுவார்த்தை ஒன்று நடைபெறும் என்று அமைச்சர் தெரிவிக்கின்றார். இருந்த போதிலும் நாங்கள் இந்த பேச்சுவார்த்தையை ஆரம்பத்திலிருந்தே குறிப்பிடுகின்றோம், இலங்கை கடற்பரப்பிற்குள் இந்திய குறிப்பாக தமிழக, பாண்டிசேரி சார்ந்த கடற்தொழிலாளர்கள் எங்களது கடல் எல்லைக்குள் வந்து எமது அரசாங்கத்தால் தடை செய்யப் பட்டிருக்கின்ற இழுவை மடியைக் கொண்டு தொழில் செய்வது தடுக்கப்பட வேண்டும்.
அவ்வாறு தடுக்கப்படும் பட்சத்தில் தான் அவர்களோடு நாங்கள் பேச்சுவார்த்தையை மேற்கொள்ள முடியும் என்ற கருத்தை நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம் என குறிப்பிட்டுள்ளார்.
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 20 Evening