காங்கேசன்துறை துறைமுகத்தில் ஏலம் விடப்பட்ட இந்தியப்படகுகள் : இன்றும் பல லட்சம் ரூபாய்க்கு விற்பனை(Video)
யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை துறைமுகத்தில் வைத்து இன்று ஏலத்தில் விடப்பட்ட 5 இந்தியப் படகுகளும் 4 லட்சத்து 31 ஆயிரத்து 500 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகக் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்கள யாழ்ப்பாண மாவட்ட உதவிப் பணிப்பாளர் ஜெயராஜசிங்கம் சுதாகரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 5 இந்தியப் படகுகள் இன்றையதினம் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டது.
கொழும்பிலிருந்து வந்த கடற்றொழில் நீரியல்வளத் திணைக்கள தலைமையக அதிகாரிகள் குழு ஏலத்தில் விற்பனை செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
நீர்கொழும்பு, கொழும்பு, புத்தளம், மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து வருகை தந்தவர்கள் ஏலத்தில் கலந்துகொண்டிருந்தனர்.
இந்த நிலையிலேயே குறித்த 5 படகுகளும் 4 லட்சத்து 31 ஆயிரத்து 500 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
அத்தோடு நேற்றையதினம் காரைநகரில் வைத்து 135 இந்தியப் படகுகள் ஏலத்தில்
விடப்பட்டதில் 52 லட்சத்து 20 ஆயிரத்து 500 ரூபாவிற்கு விற்பனை
செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.







