சிறைகளில் உள்ள குற்றவாளிகள் தொடர்பில் வெளிவந்த தகவல்
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுக்கும் போதைப்பொருள் கடத்தல்களுக்கும் நேரடித் தொடர்பு இருப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இந்த இரண்டு செயற்பாடுகளும் படிப்படியாக தீவிரமாகி வருவதன் மூலம் நாட்டின் சிறுவர்கள் சமூகம்; பாதிக்கப்படுவதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
பெரும் பேரழிவு
நீதியுள்ள மற்றும் அறிவார்ந்த சமூகத்தை உருவாக்க, நல்ல மனித வளங்கள் இருக்க வேண்டும் எனினும், நாட்டின் சிறுவர் சமூகத்துக்கு இந்த போதைப்பொருள் அச்சுறுத்தலாக உள்ள நிலையில், நீதியுள்ள சமூகத்தை உருவாக்க முடியாது.
அத்துடன், போதைப்பொருள் நாட்டின் எதிர்கால சந்ததியினரை அழிக்கும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
சிறைகளில் உள்ள குற்றவாளிகளில் 72வீதமானோர்; போதைப்பொருள் தொடர்பான குற்றங்களில் ஈடுபடுபவர்கள் என்றும், இந்த எண்ணிக்கை 100வீதமாக அதிகரித்தால், சமூகத்தில் பெரும் பேரழிவு ஏற்படும் என்றும் அமைச்சர் எச்சரித்துள்ளார்.
போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள்
நாடு, பொருளாதார ரீதியாக வளர்ச்சியடைந்தாலும், நாட்டின் எதிர்கால சந்ததியினர் இந்தப் பேரழிவிற்கு பலியானால், இலங்கை ஒரு நாடாக வளர்ச்சியடைய முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
புதிதாகப் பணியமர்த்தப்பட்ட பொலிஸ் அதிகாரிகளில் 15 வீதம் முதல் 20வீதமானோர் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் என்றும், இதன் விளைவாக, ஜனவரி முதல் 68 அதிகாரிகள் பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்தப் பேரிடருக்கு தீர்வாக, இலங்கையில் போதைப்பொருளை ஒழிப்பதற்கான தேசிய பிரசாரம் அடுத்த 10-12 நாட்களுக்குள் ஜனாதிபதியின் தலைமையில் ஆரம்பிக்கப்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.



