பாகிஸ்தானை வீழ்த்தி ஆசியகோப்பையை கைப்பற்றியது இந்தியா..!
ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி வெற்றிப்பெற்றுள்ளது.
ஆசிய கோப்பை இறுதிப்போட்டி நேற்றையதினம்(28)துபாயில் நடைபெற்றது.
பாகிஸ்தான் அணி
இந்த போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின.
நாணயசுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
இதற்கமைய முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி அதிரடியாக ஆடிய நிலையில் 57 ஓட்டங்கள் சேர்த்த நிலையில் பர்ஹானும் 47 ஓட்டங்கள் சேர்த்த நிலையில் பகர் சமானும் ஆட்டமிழந்தனர்.
அதனை தொடர்ந்து வந்த வீரர்கள் சோபிக்காத நிலையில், இறுதியில், பாகிஸ்தான் அணி 19.1 ஓவரில் 146 ஓட்டங்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.
இந்தியா சார்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டும், பும்ரா, வருண் சக்கரவர்த்தி, அக்சர் பட்டேல் தலா 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.
இந்திய அணி
இதையடுத்து 147 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. அபிஷேக் சர்மா 5 ஓட்டங்களிலும், சூர்யகுமார் யாதவ் ஒரு ஓட்டத்திலும், சுப்மன் கில் 12 ஓட்டங்களிலும், ஆட்டமிழந்தனர்.
இதனால் 20 ஓட்டங்களுக்குள் 3 விக்கெட்களை இழந்ததது. 4ஆவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த திலக் வர்மா மற்றும் சஞ்சு சாம்சன் பொறுப்புடன் ஆடி 57 ஓட்டங்களை சேர்த்த நிலையில் சஞ்சு சாம்சன் 24 ஓட்டங்களில் வெளியேறினார்.
அடுத்து இறங்கிய ஷிவம் துபே திலக் வர்மாவுடன் இணைந்து அதிரடியாக ஆடினார்.
பொறுப்புடன் ஆடிய திலக் வர்மா அரை சதம் கடந்தார். இறுதியில், இந்தியா 19.4 ஓவரில் 150 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்று ஆசிய கோப்பையை கைப்பற்றியது. திலக் வர்மா 69 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.
நடப்பு ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி தொடர்ந்து 3 போட்டிகளில் இந்தியாவிடம் தோல்வி அடைந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக தகவல்-அமல்



