மக்களை ஏமாற்றிய என்.பி.பி. அரசாங்கம்! சாடுகின்றார் நாமல்
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான என்.பி.பி. அரசு பொய் வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றியுள்ளது. அதைத் தற்போது மக்களும் உணர்ந்துள்ளனர் என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில், "திருடனும் மக்களோடு இணைந்து திருடனைப் பிடிப்பது போல் தான் என்.பி.பி. அரசும் செயற்படுகின்றது.
அரசில் உள்ள பலரின் சொத்து விவரங்கள் தெரியப்படுத்தப்பட்டுள்ளன. நாட்டில் அண்மைக் காலமாக இடம்பெற்ற உப்பு, அரிசி மற்றும் கொள்கலன்கள் விடுவிப்பு ஆகிய மோசடிகளை மறைப்பதற்காகவே அரசு போதைப்பொருளை ஆயுதமாகப் பயன்படுத்துகின்றது.
சர்வதேச புலனாய்வுப் பிரிவு
அரசின் உயர் அதிகாரத்தில் இருந்தவர்களே சுங்கத்தில் இருந்த சர்ச்சைக்குரிய கொள்கலன்களை விடுவிக்க அனுமதியளித்தனர். ஆளும் கட்சியின் இராஜாங்க அமைச்சர் கொள்கலன்கள் எங்கு கொண்டு செல்லப்பட்டன என்பது தனக்குத் தெரியும் எனக் கூறியுள்ளார்.
குறித்த கொள்கலன்கள் சுங்கப் பிரிவு மற்றும் தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையால் பரிசோதிக்கப்பட இருந்ததுடன், சர்வதேச புலனாய்வுப் பிரிவிடம் இருந்தும் தகவல்களும் கிடைத்திருந்தன.
என்.பி.பி. அரசு
இந்நிலையில் அவை விடுவிக்கப்பட்டுள்ளன. அரசு தொடர்ந்தும் எம் மீது குற்றம் சுமத்துவதை விடுத்து போதைப்பொருள் அடங்கிய 2 கொள்கலன்களையும், சோதனையிடப்படாத ஏனைய 323 கொள்கலன்களையும் விடுவிக்க அனுமதியளித்தது யார்? என்பதை விரைவில் வெளிப்படுத்த வேண்டும்.
எவ்வாறாயினும் எம் மீது பழி சுமத்தி இதிலிருந்து தப்ப முடியாது. ஒரு வருடத்தை எமது தரப்பைக் குற்றம் சாட்டியே கடந்து விட்டனர்.
மீதமுள்ள 4 வருடங்களையும் அவ்வாறே கடந்து விடுவார்கள். என்.பி.பி. அரசு பொய் வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றியுள்ளது. அதைத் தற்போது மக்களும் உணர்ந்துள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்.



