கட்டுநாயக்க விமான நிலையத்தில் 19 கடவுச்சீட்டுகளுடன் சிக்கிய தமிழ் பயணி
வெளிநாட்டு விமானப் பயணி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
வரி செலுத்தாமல் நாட்டிற்கு கொண்டு வந்த சுமார் 2.5 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள 88 விஸ்கி போத்தல்களுடன் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரான வெளிநாட்டவர் அதிகாரிகளுக்கு தெரியாமல் விஸ்கி போத்தல்களை விமான நிலையத்திலிருந்து கொண்டு செல்ல முயற்சித்துள்ளார்.
புலனாய்வுத் துறை அதிகாரிகள்
எனினும் விமான நிலைய குற்றப் புலனாய்வுத் துறையின் அதிகாரிகள் குழுவினால் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
42 வயதான குறித்த நபர் இந்தியாவின் சென்னையில் வசிப்பவர் என தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் நேற்று முன்தினம்பிற்பகல் 2.00 மணியளவில் இந்தியாவின் பெங்களூரிலிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் UL-1174 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
விரிவான விசாரணை
சந்தேக நபரின் பொதியை சோதனையிட்டபோது 19 இலங்கை கடவுச்சீட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
சம்பவம் குறித்து விரிவான விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
மேலும் இந்திய நாட்டவர், விஸ்கி போத்தல் மற்றும் இலங்கை கடவுச்சீட்டுகளுடன் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
அவரை அடுத்த மாதம் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.