தீர்வு விடயத்தில் வலியுறுத்தலை மட்டுமே எம்மால் வழங்க முடியும்: இந்தியா திட்டவட்டம்
இலங்கைத் தமிழர்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு வழங்குமாறு இலங்கை அரசை வலியுறுத்த மட்டுமே முடியுமென இலங்கைக்கான புதிய இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா தமிழ்த் தேசியக் கட்சிகளிடம் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் உள்ள இந்தியத் தூதுவர் இல்லத்தில், தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரதிநிதிகள் ஆகியோருக்கும் இந்தியத் தூதுவருக்கும் இடையில் சந்திப்பொன்று இன்று நடைபெற்றது.
இதன்போதே இந்தியத் தூதுவர் மேற்கண்டவாறு சுட்டிக்காட்டியுள்ளார்.
திருகோணமலை மெகா சிட்டி
இதன்போது, “வடக்கு - கிழக்கு மீளிணைக்கப்பட வேண்டும், அதிகாரம் பகிரப்பட்டு மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும், தேர்தல் நடத்தப்படா விட்டால், திரும்பத் திரும்ப நாம் உங்களிடம் இப்படி முறையிட்டுக் கொண்டிருப்பதை விட வேறு வழியில்லை என்று தமிழ்த் தரப்புக்கள் இந்தியத் தூதுவரிடம் வலியுறுத்தியுள்ளன.
மேலும், “முல்லைத்தீவில் மகாவலி திட்டத்தின் கீழ் தமிழ் மக்களின் பூர்வீக நிலத்தில் 600 சிங்களக் குடும்பங்களைக் குடியமர்த்தத் திட்டமிடப்படுகின்றமை, திருகோணமலையில் மெகா சிட்டி திட்டத்தை முன்னெடுப்பதாகக் கூறி இந்தியாவைத் தவிர்த்து பிற நாடுகளை உள்ளீர்க்கும் முயற்சி, மட்டக்களப்பு, மயிலத்தமடு - மாதவனை மேய்ச்சல் தரை பெரும்பான்மை இனத்தவர்களால் ஆக்கிரமிப்பு, பலாலி விமான நிலைய அபிவிருத்தி உள்ளிட்ட பல விடயங்களைத் தமிழ்த் தரப்புக்கள் இந்தியத் தூதுவரிடம் எடுத்துரைத்துள்ளனர்.
இதன்படி, இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள சமயத்தில் இந்தியா நிதி உதவி வழங்கியது என்றும், தற்போது தேர்தல் நடத்தப் பணமில்லை என்று அரசு கூறுகின்றது என்றும் தேர்தலை நடத்த இந்தியா பணம் வழங்கலாம் என்றும் தமிழ்க் கட்சிகள் இதன்போது யோசனையொன்றையும் முன்வைத்துள்ளன.
அபிவிருத்தித் திட்டம்
இந்நிலையில் கருத்து தெரிவித்த அவர், “அபிவிருத்தித் திட்டங்களுடன், அரசியல் தீர்வையே இந்தியா இலக்காகக் கொண்டுள்ளது. இந்தியாவிலிருந்து கடலடி மார்க்கத்தில் மின்சாரம் கொண்டு வரும் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
இந்தியாவும், சர்வதேசமும் இலங்கையிடம் இவற்றைச் சொல்லத்தான் முடியும். இந்தியா தொடர்ந்து இதை வலியுறுத்தி வருகின்றது.
இதற்கமைய, ரணில் விக்ரமசிங்க இந்தியா வந்தபோது, பிரதமர் நரேந்திர மோடி மூடிய அறைக்குள் இந்த விடயங்களை வலியுறுத்தினார். பின்னர் பகிரங்கமாகவும் சொன்னார்.” என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |