திணறும் இலங்கை! இக்கட்டான கட்டத்தில் கை கொடுக்கத் தயாராகும் நாடு
“இக்கட்டான காலங்களில்” இலங்கைக்கு ஆதரவளிக்க இந்தியா உறுதியளித்துள்ளது.
இருதரப்பு எரிசக்தி பாதுகாப்பை அதிகரிக்கும் திருகோணமலை எண்ணெய் குத உடன்படிக்கையை வரவேற்றுள்ள நிலையிலேயே இந்த உறுதிமொழியை இந்தியா வழங்கியுள்ளது.
இலங்கையின் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இந்தியா கடன் வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து, இந்திய வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் அரிந்தம் பாக்சியிடம், ஊடகவியலாளர்களிடம் கேட்டபோது, இலங்கை மக்களுக்கு இந்தியா எப்போதும் துணை நிற்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த “கடினமான காலங்களில்” இலங்கைக்கு இந்தியா ஆதரவளிக்கும் என்று இலங்கையின் வெளியுறவு அமைச்சருடனான தொலைபேசி உரையாடலின்போது, இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் உறுதியளித்துள்ளதாக அரிந்தம் பாக்சி தெரிவித்தார்.
இலங்கை அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ள எஞ்சிய இந்திய மீனவர்களை விரைவில் விடுவிக்க கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக பாக்சி கூறினார்.
இந்தியாவின் கடன் நீடிப்பு குறித்த கேள்விக்கு பதிலளித்த பாக்சி, கடந்த மாதம் இலங்கை நிதியமைச்சர் பசில் ராஜபக்ச புதுடெல்லிக்கு வந்து "இலங்கையின் பொருளாதார நிலைமை குறித்து இந்திய தரப்புக்கு விளக்கியதாக குறிப்பிட்டார்.
ராஜபக்சவின் பயணத்தின் போது, உணவு மற்றும் சுகாதார பாதுகாப்பு, எரிசக்தி பாதுகாப்பு, செலுத்தும் நிலுவை பிரச்சினைகள் மற்றும் இலங்கையில் இந்திய முதலீடுகள் உள்ளிட்ட துறைகளில் இந்தியாவின் ஒத்துழைப்பை ஆழமாக்குவது குறித்து கலந்துரையாடப்பட்டது என்றும் பாக்சி தெரிவித்தார்.