மாகாண சபை நடைமுறைக்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும்: சந்திரகுமார்
மாகாண சபை நடைமுறைக்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் சமத்துவ கட்சியின் தலைவர் சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் (16.07.2023) தந்தை செல்வா அறக்கட்டளை நிலையத்தில் இடம்பெற்ற 13 வது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தும் இந்தியாவின் வகிபாகம் பற்றிய கலந்துரையாடல் நிகழ்வை தலைமை தாங்கி கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
மாகாண சபை அதிகாரங்களுடன் முழுமையாக நடைமுறைபடுத்த இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும்.
இலங்கையில் வடக்கில் போர் நிறைவுக்கு வந்தவுடன் வீட்டுத்திட்டம் அனைவருக்கும் வந்தது. சுமார் 5லட்சம் ரூபாய்க்கு 40000 ஆயிரம் வீடுகள் இதன் மூலம் கட்டப்பட்டது.
இருப்பினும் அனைவரும் இந்த வீட்டு திட்டத்தினை ஏற்றுகொள்ளவில்லை ஆனால் அதனை பெற்றவர்கள் தமது வீடுகளை புனரமைத்து இன்று அதன் பெறுமதியினை 50 லட்சம் ரூபாயாக மாற்றியிருக்கின்றார்கள்.
ஆகவே இது போல தான் இந்த பதின்மூன்றாவது திருத்தசட்டமும் இந்தியாவால் வழங்கப்பட்டது.
ஒற்றுமையான கடிதம்
இதனை நாங்கள் முதலில் பெற்று விட்ட பின்னரே நாம் எமது இறுதி தீர்வினை நடைமுறைபடுத்தலாம்.
எம்மால் இதனை கூட ஒற்றுமையாக கடிதம் ஒன்றை வரைந்து மோடிக்கு அனுப்பமுடியாது இருக்கின்றோம்.
ஆக இன்று இந்த அதிகார பகிர்வு இயக்கம் மாற்று யோசனை உள்ள அனைவரையும் ஒன்றிணைத்து சிறந்த விடயமாகும்.
எதிர்வரும் காலங்களில் மோடியினை சந்திக்கும் பொழுது இதனது அழுத்தம் ரணில் விக்ரமசிங்கவின் மீது தெளிவுபடுத்தலாக இடம்பெறவேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பத்மநாதனின் வேண்டுகோள்
13 வது திருத்தத்தை நடைமுறைப்படுத்த விரும்பாதவர்கள் அதனை நடைமுறைப்படுத்த விரும்புபவர்களுக்கு குந்தகம் விளைவிக்க வேண்டாம் என யாழ். பல்கலைக்கழக வேந்தரும் வரலாற்று துறைப் பேராசிரியருமான சிவசுப்பிரமணியம் பத்மநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தந்தை செல்வா அறக்கட்டளை நிலையத்தில் இடம்பெற்ற 13 வது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தும் இந்தியாவின் வகிபாகம் பற்றிய கலந்துரையாடல் நிகழ்வை தலைமை தாங்கி கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கைக்கும் இந்திய துணைக் கண்டத்துக்கும் சுமார் 2500 ஆண்டுகள் பழமையான தொடர்பு காணப்படுகிறது.
இலங்கை இந்தியா ஒப்பந்தத்தின் பிரகாரம் 13ஆவது திருத்தச் சட்டம் இலங்கையில் ஏற்படுத்தப்பட்ட நிலையில் குறித்த சட்டம் நடைமுறைத் தன்மை குன்றியதாகவே காணப்படுகிறது.
ஜே.ஆர் காலத்தில் தமிழ் மக்கள் மீது ஏற்படுத்தப்பட்ட அடக்குமுறை அப்போதைய இந்திய பிரதமர் இந்திராகாந்தியின் கரிசனை இலங்கையில் பதிமூன்றாவது திருத்தத்தை ஏற்படுத்துவதற்கு வழிகோலியது.
சிலர் 13 தமிழ் மக்களுக்கு தீர்வு இல்லை என கூறுகிறார்கள். நானும் 13ஐ முழுமையான தீர்வாக ஏற்றுக் கொள்ளாத நிலையில் இந்தியாவும் இதை இறுதித் தீர்வாகக் கூறவில்லை.
தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்கும் பதின்மூன்றுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளதால் அதனை ஆரம்ப புள்ளியாக முன்னெடுக்க விரும்பாதவர்கள் அதனை முன்னெடுத்துச் செல்வோருக்கு தடையாக இருக்கக்கூடாது.
தமிழ் கட்சிகள் ஒற்றுமையுடன் பதிமூன்றாவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஓரணியில் நின்று இந்தியாவுக்கு தமது நிலைப்பாட்டை எடுத்துக்கூற வேண்டும்.
ஆகவே தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை வென்றெடுப்பதற்கு ஆரம்பப் புள்ளியாக இருக்கின்ற பதின்மூன்றாவது திருத்தத்தை உதறித் தள்ளினால் எல்லாமே சூனியமாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர் நீதியரசர் சிவி விக்னேஸ்வரன், வடக்கு கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரின் செயலாளர் கலாநிதி கந்தையா விக்னேஸ்வரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் , முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் கஜதீபன் , முன்னாள் வடமாகாண சபை எதிர்கட்சி தலைவர் தவராசா, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன், எனப் பலரும் கலந்து கொண்டனர்.
செய்தி-கஜிந்தன்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |




