இலங்கை தமிழர்களுக்கு இந்தியா தீர்க்கமானதொரு தீர்வினை பெற்றுக்கொடுக்க வேண்டும்!
இலங்கை தமிழர்களுக்கு இந்தியா தீர்க்கமானதொரு தீர்வினை பெற்றுக்கொடுக்க வேண்டும் என கிழக்கு மாகாணசபையின் முன்னாள் தவிசாளரும், தமிழீழ விடுதலை இயக்கத்தின் பிரதி தலைவருமான பிரசன்னா இந்திரகுமார் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை படுகொலையின் 34வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று காலை உணர்வுபூர்வமாக நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,
“ஒவ்வொரு வருடமும் நாங்கள் எங்களுடைய உறவுகளுக்காக இவ்விடத்தில் அஞ்சலி செலுத்திக்கொண்டிருக்கின்றோம். எங்கள் மக்களுடைய படுகொலை என்பது சர்வதேசம் அறிந்த உண்மையாகும்.
ஆனால் இந்த நாட்டினுடைய இனவாத அரசியல் கட்சிகள் மாறிமாறி ஆட்சிக்கு வந்தாலும் எங்களுடைய மக்களுக்கான நியாயமான தீர்வு கிடைக்கவில்லை.
தாங்கள் ஆட்சிபீடம் ஏறவேண்டும் என்பதற்காக எங்களுடைய தலைவர்களை ஏமாற்றி மக்களின் வாக்குகளை பெற்று ஆட்சி பீடம் ஏறியபோதும்கூட கடந்த ஆட்சியில் எங்களுடைய மக்களுக்கான நியாயம் கிடைக்கவில்லை.
தமிழர்களுக்காக அயல் நாடான இந்தியா தீர்க்கமானதொரு தீர்வினை பெற்றுக்கொடுக்க வேண்டும். வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறவிருக்கின்ற மனித உரிமைகள் மாநாட்டின் கூட்டத் தொடரில் எமக்கு நல்லதொரு தீர்வு கிடைக்க வேண்டும்.
அப்பொழுது தான் இறந்த எமது மக்களின் ஆத்மா சாந்தியடையும்.இந்த அரசாங்கங்களை நம்பி நாம் ஏமாறுவதைவிட சர்வதேசத்தின் அழுத்தங்கள் ஊடாக எமது மக்களுக்கான நியாயம் கிடைக்கும்” என்றார்.


