தலைமன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட இந்திய கடற்றொழிலாளர்கள் நிபந்தனை விடுதலை
தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டு தொடர்ச்சியாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 09 இந்திய கடற்றொழிலாளர்களையும் நிபந்தனையின் அடிப்படையில் விடுதலை செய்ய மன்னார் மேலதிக நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவானது இன்று(03.09.2026) பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவு
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த நிலையில் தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து இந்திய இழுவைப் படகு ஒன்றுடன் 9 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு தலைமன்னார் கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
தலைமன்னார் கடற்படையினர் விசாரணைகளின் பின்னர் இவர்கள் மன்னார் மாவட்ட கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து அவர்கள் மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதனையடுத்து குறித்த 9 கடற்றொழிலாளர்களும் தொடர்ச்சியாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் குறித்த 9 கடற்றொழிலாளர்களும் இன்றைய தினம் மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர். இதனையடுத்து நிபந்தனையின் அடிப்படையில் மன்னார் நீதிமன்றம் அவர்களை விடுதலை செய்துள்ளது.