இந்திய அரசிடம் கனடா பிரதமர் விடுத்துள்ள கோரிக்கை: வலுப்பெற்று வரும் மோதல் நிலை
சீக்கிய பிரிவினைவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை விசாரணை மற்றும் நீதி வழங்கப்படுவதற்கு கனடாவுடன் இணைந்து செயற்படுமாறு இந்தியாவிற்கு கனடா பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார்.
சீக்கிய பிரிவினைவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஜூன் மாதம் கனடாவில் படுகொலை செய்யப்பட்ட விவகாரம் இரு நாடுகளுக்கும் இடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இவ்வழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நேற்று (21.09.2023) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே கனடா பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இணைந்து பணியாற்றுமாறு கோரிக்கை
அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த விவகாரம் தொடர்பாக நான் பிரதமர் மோடியிடம் வெளிப்படையாக உரையாடினேன். அப்போது என் கவலைகளை பகிர்ந்துகொண்டேன்.
இந்த விவகாரத்தை தீவிரமாக எடுத்துக்கொள்ளவும், முழு வெளிப்படைத் தன்மையை வெளிப்படுத்த எங்களுடன் இணைந்து பணியாற்றவும் இந்திய அரசை கேட்டுக்கொண்டேன்.
இந்தியா வளர்ந்து வரும் முக்கியத்துவம் வாய்ந்த நாடு. உலகெங்கிலும் நாம் தொடர்ந்து பணியாற்ற வேண்டிய ஒரு நாடு. நாங்கள் பிரச்சினைகளைத் உருவாக்கவோ அல்லது அதிகப்படுத்தவோ நினைக்கவில்லை.
இந்த விஷயத்தின் உண்மையை வெளிக்கொண்டு வருவதற்கான செயல்முறைகளை மேற்கொள்ள எங்களுடன் இணைந்து பணியாற்றுமாறு இந்திய அரசாங்கத்தை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம் என தெரிவித்துள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீரென நீக்கப்பட்ட கடுமையான கட்டுப்பாடு: பின்னணியில் செயற்பட்ட அதிகாரம்
கடும் கண்டனம்
மேலும், சீக்கிய பிரிவினைவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஜூன் மாதம் கனடாவில் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் இந்தியாவின் ரோ அமைப்பிற்கு தொடர்பு இருப்பதாக கனடா குற்றஞ்சாட்டி உள்ளது.
இந்நிலையில் இந்தியா கனடாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்தது மட்டுமின்றி, பதிலடியாக கனடா உயர் தூதரக அதிகாரியை நாட்டை விட்டு வெளியேற மத்திய அரசு உத்தரவிட்டது.
மேலும், கனடா வாழ் மக்களுக்கு விசா வழங்க இந்தியா இடைக்கால தடை விதித்துள்ளது. இதனால் கனடா, இந்தியா இடையேயான உறவு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கனடாவுடன் இந்தியா இணைந்து பணியாற்ற வேண்டும் என அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.