20க்கும் மேற்பட்டோரை நாடு கடத்துங்கள்: இந்திய தரப்புக்களால் கனடாவிடம் கோரிக்கை
ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலையில் இந்தியாவுக்கு பங்கிருப்பதாக கனேடிய பிரதமர் குற்றஞ்சாட்டியுள்ள நிலையில், தற்போது பெயரிடப்பட்டுள்ள 20 பேர்ரை ஒப்படைக்கும்படி கனடாவிடம் இந்தியா கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளது.
சீக்கிய பிரிவினைவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஜூன் மாதம் கனடாவில் படுகொலை செய்யப்பட்டார்.
இந்த விவகாரத்தில் இந்தியாவுக்கு பங்கிருப்பதாக விசாரணையில் அம்பலமாகியுள்ளது என கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
20க்கும் மேற்பட்டோரை நாடு கடத்த வேண்டும்
இந்த விவகாரம் தற்போது இரு நாடுகளுக்கும் இடையே, கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இந்திய வெளிவிவகார அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தெரிவிக்கையில்,
''கனடாவில் இருந்து 20க்கும் மேற்பட்டோரை நாடு கடத்த வேண்டும் என இந்தியா கோரிக்கை வைத்துள்ளது.
இதில் சீக்கிய பிரிவினைவாதிகள் உட்பட பலர் இடம்பெற்றுள்ளதாகவும், சமீப ஆண்டுகளில் தீவிரவாதிகள் என இந்திய அரசால் அறிவிக்கப்பட்டவர்களும் கனடாவில் குடியிருக்கின்றனர்.
அவர்கள் மீதான உரிய விசாரணை முன்னெடுக்கும் பொருட்டு, அவர்களை இந்தியாவிடம் கனடா ஒப்படைக்க வேண்டும்.
அத்துடன் தீவிரவாதிகளின் புகலிடமாக கனடா மாறி வருவதாக குறிப்பிட்டுள்ள அரிந்தம் பாக்சி, அடிப்படைவாதிகள், தீவிரவாதிகள் மற்றும் குழு குற்றங்களுக்கு எதிராக கனடா நடவடிக்கை முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.