அமெரிக்காவிடம் பகிர்ந்துகொள்ளப்படும் ஆதாரங்கள்: கனடா - இந்தியா தொடர்பில் அச்சம் வெளியிடும் மேற்குலகம்
கனடாவில் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை விசாரணைகளில் அமெரிக்காவின் சிஐஏ புலனாய்வு அமைப்பு கனடாவுக்கு உதவி செய்து வருவதாகவும் இந்த கொலைகுறித்து தங்களிடம் இருக்கும் ஆதாரங்களை கனடா அமெரிக்காவிடம் பகிர்ந்துவருவதாகவும் கூறப்படுகிறது.
இந்திய முகவர்கள்தான் இந்த கொலையை செய்ததாக கனடா குற்றஞ்சாட்டுகிறது. எனினும் இந்தியா இதனை மறுக்கும் நிலையில் இந்த விடயத்தில் விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதான கருத்துக்களும் முன்வைக்கப்படுகின்றன.
கனடாவில் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில் கனடாவுக்கும், இந்தியாவுக்கும் இடையே ஒரு விரிசல் நிலை தோன்றியுள்ளது.
அமெரிக்காவும் ஏனைய மேற்குலக நாடுகளும் இந்த விரிசல் நிலை காரணமாக தங்களுடனான இந்தியாவின் உறவுகளுக்கு பாதிப்பு ஏற்படுமோ என்று அச்சம் வெளியிட்டுள்ளன.
இந்தியாவின் பின்னணி
கனடா - இந்தியா விவகாரத்தில் எந்த நாட்டிற்கு ஆதரவு தெரிவித்தாலும் மோசமான விளைவுகள் ஏற்படும் என மேற்கத்திய நாடுகள் அச்சம் வெளியிட்டுள்ளன.
கனடாவில் வசித்து வந்த சீக்கிய ஆர்வலரான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஜுன் மாதம் படுகொலை செய்யப்பட்டமை பாரிய சர்ச்சை நிலையை தோற்றுவித்திருந்தது.
இந்நிலையில் கனடாவில் படுகொலை செய்யப்பட்ட ஹர்தீப் சிங் நிஜ்ஜார் விவகாரத்தில் இந்தியாவின் பின்னணி இருப்பதாக கனேடிய பிரதமர் குற்றம் சுமத்தியிருந்தார்.
இந்த குற்றச்சாட்டானது இந்திய - கனடா உறவு நிலையில் பெரும் கசப்பு நிலையை தோற்றுவித்தது.
தற்போது விடயம் குறித்து கருத்து கூறிய வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கனேடிய பிரதமர் ட்ரூடோவின் இந்தியா மீதான குற்றச்சாட்டுகள் குறித்து அமெரிக்கா ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாகவும் கனடாவுடன் அமெரிக்கா இந்த விடயத்தில் தொடர்பில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் கனடா நடத்தும் விசாரணைகள் மூலம் குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தப்படுவது முக்கியமானதெனவும் வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
புவிசார் அரசியலில் இந்தியாவின் தேவை
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் ஆகியோரிடம் கனடா பிரதமர் ட்ரூடோ இந்த விவகாரத்தை முன்வைத்ததாக கனடா வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கனடாவில் நடந்த படுகொலையில் இந்தியாவுக்கு பங்கிருப்பதாக அந்நாட்டு அரசு எழுப்பியிருக்கும் குற்றச்சாட்டு ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தியதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அதே நேரம், "கனடாவின் விசாரணை தொடர்வதும், குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தப்படுவதும் மிகவும் முக்கியமானது," என்று கூறியுள்ளது.
உலகளாவிய நடைமுறை புவிசார் அரசியலில் இந்தியாவின் தேவையை மேற்குலம் நன்கு உணர்ந்துள்ளது.
இந்நிலையில், கனடா மேற்கொண்டு வரும் விசாரணையின் இறுதி வரை வரை அமெக்காவும் ஏனைய மேற்குலக நாடுகளும் பொறுத்திருந்து கவனிப்பதைத் தவிர வேறுநிலை எடுக்க வாய்ப்பில்லை எனவும், கனடாவின் உளவுத் துறைக்கு ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலை தொடர்பாகத் தெரிந்த தகவல்களை சில நட்பு நாடுகள் வழங்கலாம் எனவும் கூறப்படுகிறது.
இந்தப் படுகொலையில் இந்தியாவின் பங்கு உறுதிப்படுத்தப்பட்டால் மேற்குலகின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என சர்வதேச தரப்புக்களில் கேள்விகள் எழுந்துள்ளமையும் இங்கு பேசுபொருளாக மாறியுள்ளது.