உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள சில குற்றச்சாட்டுகள் நிராகரிக்கப்பட வேண்டியவை
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள சில குற்றச்சாட்டுகள், சதிக் கோட்பாடுகளை கொண்டவை என்று மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கமளித்துள்ளார்.
எனவே அவை நிராகரிக்கப்படவேண்டியவை என்றும் அந்த மூத்த பொலிஸ் அதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று (19.09.2023) நடைபெற்ற கூட்டத்தின் போது இந்த கருத்துக்களை அவர் வெளியிட்டார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கமளிக்கும் வகையில் பயங்கரவாத தடுப்புப் புலனாய்வுப் பிரிவின் தலைவர் பிரசன்ன அல்விஸ் கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.
கோட்பாடுகள் பொய்யானவை
புலனாய்வு அதிகாரி என்றுக் கூறப்படும் 'சோனிக்' மீதான குற்றச்சாட்டுகள் மற்றும் நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டி தேவாலயத்தில் தன்னைத் தானே வெடிக்கச் செய்த தற்கொலைக் குண்டுதாரியின் மனைவி சாரா ஜாஸ்மின் என்பதும் சதி கோட்பாடுகள் மற்றும் பொய்யானவை என்று அவர் குறிப்பிட்டார்.
எனினும் அசாத் மௌலானா மற்றும் பிரித்தானிய ஊடகமான சனல் 4 சமீபத்தில் வெளியிட்ட குற்றச்சாட்டுகள் பற்றி இந்த கூட்டத்தின்போது எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பொலிஸார் உரிய பதில்களை வழங்கவில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
கூட்டத்தில் பங்கேற்காமை
சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிலாந்த ஜயவர்தன மற்றும் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் தேசபந்து தென்னகோன் ஆகியோர் கூட்டத்தில் கலந்துகொண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கமளிக்கவுள்ளதாக முன்னதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும் இந்த இரண்டு அதிகாரிகளும் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
இந்தநிலையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பிலான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை புறக்கணித்தமைக்கு பொறுப்பேற்றுள்ள இரண்டு அதிகாரிகளும் எவ்வாறு தாக்குதல்கள் தொடர்பிலான விசாரணைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து பேசுகின்றனர் என எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளரான லக்ஸ்மன் கிரியெல்ல முன்னதாக கேள்வி எழுப்பினார்.
நட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |