இலங்கையில் பணிபுரிந்த பாகிஸ்தான் அதிகாரிக்கு அறிவித்தல் அனுப்பிய இந்திய புலனாய்வுத்துறை
இந்தியாவில் உள்ள அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய தூதரகங்களை குண்டு வைக்க சதித்திட்டம் தீட்டியதாக குற்றம் சுமத்தப்பட்ட இலங்கையில் பணியில் இருந்த பாகிஸ்தான் அதிகாரிக்கு, என்ஐஏ என்ற இந்திய புலனாய்வு பிரிவு சிறப்பு நீதிமன்ற அறிவித்தல் அனுப்பியுள்ளது.
சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம் மற்றும் பெங்களூருவில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்தை குண்டு வைக்க சதி செய்ததாகவே குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
பாகிஸ்தான் அதிகாரி
இந்தநிலையில்,இலங்கையில் உள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தில் பணிபுரிந்த பாகிஸ்தான் அதிகாரி ஒருவர், 2025 ஒக்டோபர் 15 ஆம் திகதியன்று நேரில் முன்னிலையாக வேண்டும் என்று பூந்தமல்லியில் உள்ள புலனாய்வுப்பிரிவு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் இன்று செய்தி வெளியிட்டுள்ளன.
பாகிஸ்தானின் கராச்சியில் நிரந்தர முகவரியைக் கொண்ட அமீர் ஸ_பைர் சித்திக் என்ற அதிகாரிக்கே இந்த அறிவித்தல் அனுப்பப்பட்டுள்ளது.
அவர் 2009 மற்றும் 2016 க்கு இடையில் கொழும்பில், பாகிஸ்தானுக்கான விசா ஆலோசகராக பணியாற்றினார் என்று இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
அறிக்கையின்படி, குற்றவியல் சதி, இந்தியாவுக்கு எதிராக போர் தொடுத்தல் மற்றும் போலி அல்லது கள்ள நோட்டுகளைப் பயன்படுத்துதல் உள்ளிட்ட குற்றங்களுக்காக அவர் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார். இந்தநிலையில் அவர் தலைமறைவாகிவிட்டதாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய புலனாய்வுத்துறை
இந்த வழக்கு, 2014 ஏப்ரலில் சென்னை, கியூ பிரிவால் பதிவு செய்யப்பட்டு, பின்னர் ஹைதராபாத் என்ஐஏ கிளையால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
சந்தேகநபரான அமீர் ஸ_பைர் சித்திக்கின் அறிவுறுத்தலின் பேரில் இந்தியாவில் நாசவேலை நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்தியா வந்த இலங்கையரான சாகிர் ஹூசைன் சென்னையில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் முதல் குற்றவாளி முகமது சாகிர் ஹூசைன் ஏற்கனவே குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளார், அதே நேரத்தில் 2018 ஆம் ஆண்டில், சித்திக்கிக்கு எதிராக என்ஐஏ மேலதிக குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது.
இருப்பினும், ஒரு கேள்விக்கு பதிலளித்த கொழும்பில் உள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம், இந்தப் பெயரைக் கொண்ட எவரும்; பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தில் பணியாற்றவில்லை என்று இலங்கையின் ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளது.




