மன்னாரில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்திய அரசின் உதவி
இந்திய(India) அரசாங்கத்தின் ஊடாக இந்திய மக்களின் உதவிப் பொருட்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மன்னார் பகுதி மக்களுக்கு இன்றைய தினம் (7) இலங்கைக்கான இந்திய துணைத் தூதரினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானின் வேண்டுகோளுக்கு அமைவாக இந்திய அரசாங்கம் மற்றும் இந்திய மக்களின் உதவி திட்டத்தினூடாக வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாய் மற்றும் போர்வை வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசின் உதவி
மன்னார் (Mannar)துள்ளு குடியிருப்பு கிராம அலுவலர் பிரிவில் உள்ள 8 கிராமங்களை சேர்ந்த பாதிக்கப்பட்ட 461 குடும்பங்களுக்கு துள்ளு குடியிருப்பு ரோமன் கத்தோலிக்க பாடசாலையில் குறித்த உதவி பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த உதவி பொருட்கள் மன்னார் மாவட்ட பகுதிகளை சேர்ந்த வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட சுமார் 1655 குடும்பங்களுக்கு வழங்கி வைக்கப்பட உள்ளது.
இந்த நிகழ்வில் யாழ் இந்திய துணைத் தூதர் ஸ்ரீ சாய் முரளி உட்பட யாழ் இந்திய துணைத் தூதரக அதிகாரி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் ,மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் உட்பட குறித்த பகுதி கிராம அலுவலர் கலந்து கொண்டு உதவி பொருட்களை வழங்கி வைத்தனர்.
முல்லைதீவு
இதேவேளை, துணுக்காய் பிரதேசத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட சில குடும்பங்களுக்கு ஒருபாயும் இரண்டு போர்வையும் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
மனிதாபிமான உதவி வழங்கும் இந்த நிகழ்வில் கருத்துரைத்த இந்திய யாழ் துணைத்தூதர் ஸ்ரீ சாய் முரளி இந்தியாவும் இந்திய மக்களும் வழங்கும் இந்த உதவி இலங்கையில் குறிப்பாக வடக்கு,கிழக்கு மாகாணத்தில் மக்களுக்கு மக்களோடு இன்றும் என்றும் ஆதரவாக நின்றது நிற்பது நிற்கப்போவது என்ற நம்பிக்கையினை உங்களிடம் பகிர்ந்து கொள்கின்றேன் என்றும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |