இரு தேசங்கள் உண்டென்பதை கரிநாள் பேரணியில் பங்கேற்று முரசறைவோம்: சரவணபவன் அறைகூவல்
இந்த நாட்டில் இரண்டு தேசங்கள் உண்டு என்பதை மீண்டும் ஒரு தடவை உணர்த்துவதற்கு, தமிழர்கள் நாங்கள் ஓரணியாக கரிநாள் போராட்டத்தில் பங்கேற்கவேண்டும் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் முக்கியஸ்தரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஈ.சரவணபவன் அழைப்பு விடுத்துள்ளார்.
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் சமூகத்தால் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள கரிநாள் பேரணி கிளிநொச்சியில் இடம்பெறவுள்ள நிலையில் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
குறித்த ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
1619ஆம் ஆண்டு போர்த்துக்கேயரிடம் யாழ்ப்பாண இராச்சியம் வீழ்ச்சியடைந்ததிலிருந்து இன்று வரை ஈழத் தீவிலுள்ள தமிழ் மக்கள் தங்கள் சுதந்திரத்துக்காகப் போராடி வருகின்றார்கள்.
ஆயுதப் போராட்டம்
405 ஆண்டுகளாகியும் தமிழ் மக்கள் இழந்த இறைமையை இதுவரையில் மீட்க முடியவில்லை. தமிழீழ தனியரசுக்கான ஆயுதப் போராட்டம் முனைப்புப்பெற்றபோது, இறைமை மீட்கப்படும் என்று தமிழ் மக்கள் முழுமையாக நம்பினார்கள்.
அந்தப் போராட்டம் பல்வேறு சதிகளால் வீழ்த்தப்பட்ட பின்னரான கடந்த 14 ஆண்டுகளில் இறைமையை மீட்பதற்கான நம்பிக்கையான நகர்வுகள் எதுவும் தெரியவில்லை. இலங்கையானது பிரிட்டிஷாரிடமிருந்து சுதந்திரம் பெற்றதாகச் சொல்லி தனது 76ஆவது சுதந்திர நாளை கொண்டாடுகின்றது. சிங்கள தேசம் அதை பெரு வெற்றி நாளாகக் கருதுகிறது.
ஆனால் தமிழர் தேசம் அந்த நாளை கரிநாளாக அறிவித்து சுதந்திரம் இன்னமும் கிடைக்கவில்லை என்பதை முரசறைவதற்காகப் போராடுகின்றது. இந்த நாடு பிளவடைந்து இருக்கின்றது என்பதை சொல்லாமல் சொல்லி நிற்கும் செய்தியாக இந்தக் கரிநாள் போராட்டம் அமைந்திருக்கின்றது.
தமிழர் தேசம் ஓரணியாக, பெருந்திரளாக இந்தப் போராட்டத்தில் பங்கேற்பதன் மூலமே, தமிழர் தேசத்தின் சுதந்திரவேட்கை இன்னமும் ஓயவில்லை என்ற செய்தி ஓங்கி உரைக்கப்படும். அதுவே எமது இறைமையை மீட்பதற்கான போராட்டப்பாதைக்கு உத்வேகமாக அமையும்.
எனவே யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களின் கரிநாள் போராட்டப் பேரணிக்கு நாம் அணிசேர்ப்போம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

15 நாட்களாக நிறுத்தப்பட்டிருக்கும் F-35B பிரித்தானிய போர் விமானம்: அகற்றப்பட்ட தரவுகள் News Lankasri
