அமெரிக்க தாக்குதல் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்: ஈராக் கடும் எச்சரிக்கை
புதிய இணைப்பு
சிரியா மற்றும் ஈராக்கில் தாக்குதலை முன்னெடுத்த அமெரிக்காவுக்கு ஈராக் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில் ஈராக் மீதான தாக்குதல் குறித்து அந்நாட்டு பிரதமர் அலுவலக செய்தித் தொடர்பாளர், “அமெரிக்க தாக்குதலானது மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். அமெரிக்கத் தாக்குதல்கள் ஈராக்கின் இறையாண்மையை மீறும் நடவடிக்கை ஆகும்.” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அத்தோடு, அமெரிக்காவின் இந்த நடவடிக்கையானது ஈராக் மற்றும் பிராந்தியத்தின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்கு மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று ஜெனரல் யெஹியா ரசூல் குறிப்பிட்டுள்ளார்.
முதலாம் இணைப்பு
ஜோர்தானில் மூன்று அமெரிக்க துருப்புக்களைக் கொன்ற ட்ரோன் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், அமெரிக்க இராணுவம் ஈராக் மற்றும் சிரியாவில் வான்வழித் தாக்குதலை ஆரம்பித்துள்ளது.
கடந்த வார இறுதியில் ஜோர்தானில் மூன்று அமெரிக்க துருப்புக்களை இலக்கு வைத்து பாரிய வான்வழி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள தளங்கள் மீது அமெரிக்க இராணுவம் வான்வழித் தாக்குதலை ஆரம்பித்துள்ளது.
ஹவுதி தாக்குதல்
இதன்படி சிரியாவின் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு தலைமையகம், உளவுத்துறை மையங்கள், மற்றும் ஆளில்லா விமானம் மற்றும் வெடிமருந்து சேமிப்பு தளங்கள், போராளிகள் பிற வசதிகள் உட்பட ஏழு இடங்களில் 85ற்கும் மேற்பட்ட இலக்குகள் மீது அமெரிக்க இராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.
NEWS: U.S. Strikes Targets in Iraq and Syria in Response to Deadly Drone Attack https://t.co/unfrYkUyiK
— Department of Defense ?? (@DeptofDefense) February 3, 2024
இஸ்ரேல் ஹமாஸ் போரின் ஒரு அங்கமாக மத்திய தரைக்கடல் பகுதியில் செல்லும் கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியதால் கடல் வணிகத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.
தற்போது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் இணைந்து, இந்த வணிக பாதையை மீட்க முயன்று வருகின்றன. அதேபோல, ஈராக்கில் உள்ள இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட் தலைமை அலுவலகம் மீதும் ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தினர்.
இதன் தொடர்ச்சியாக ஜோர்தானில் உள்ள அமெரிக்க இராணுவ நிலை மீதும் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.
ஈராக் எல்லையையொட்டிய ஜோா்தானின் ருக்பான் பகுதியில் அமெரிக்காவின் இராணுவ தளம் அமைந்துள்ளது. 'டவா் 22’ என்றழைக்கப்படும் அந்த தளத்தில் வெடிகுண்டு பொருத்தப்பட்ட ட்ரோன் மூலம் கடந்த மாதம் 28ம் திகதி தாக்குதல் நடத்தப்பட்டது. குறித்த தாக்குதலில் 3 அமெரிக்க வீரர்கள் உயிரிழந்தனர்.
அமெரிக்காவின் தாக்குதல்
மேலும் 34 போ் காயமடைந்தனர். இச்சம்பவம் அமெரிக்காவுக்கு பெரும் அதிர்ச்சியை தோற்றுவித்தது.
இதன்படி பைடனின் சூளுரைக்கு ஏற்றால் போல் அமெரிக்கா தனது தாக்குதலை ஆரம்பித்துள்ளதுடன், போரியல் வல்லுநர்களால் அமெரிக்காவின் தாக்குதல் சர்வதேசத்தை எச்சரிக்கும் வகையில் அமையும் என கூறப்பட்டுள்ளது.
அத்தோடு, ஜோ பைடன், “நாங்கள் மத்திய கிழக்கில் போரை விரும்பவில்லை. ஆனால், அமெரிக்கர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தினால் அதற்கு நாங்கள் பதிலளிப்போம்” என்று கூறியுள்ளார்.
இந்நிலையில், அமெரிக்க நடத்திய தாக்குதல் மூலம் இஸ்ரேல் - பாலஸ்தீன போர் மத்திய கிழக்கு முழுவதும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |