வவுனியாவில் வீதிகளுக்கு பூட்டு - பலத்த பாதுகாப்புடன் சுதந்திர தின நிகழ்வு
வவுனியாவில் சுதந்திர தின நிகழ்வுகளை முன்னிட்டு இரண்டு வீதிகள் சில மணிநேரங்கள் மூடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையின் 76ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் வவுனியா நகரசபை மைதானத்தில் இடம்பெற்ற நிலையில் வீதிகள் முடப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
சுதந்திர தின நிகழ்வுகள்
நகரசபை வீதி , நூலக வீதி ஆகியன காலை 8.30 மணி தொடக்கம் காலை 10.00 மணிவரையிலான காலப்பகுதியில் தற்காலிகமாக மூடப்பட்டது.
சுதந்திர தின நிகழ்வுகள் வவுனியா மாவட்ட செயலர் பி.ஏ.சரத் சந்திர தலைமையில் இடம்பெற்றதுடன், பிரதம அதிதியாக வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் குலசிங்கம் திலீபன் கலந்து கொண்டிருந்தார்.
நகர் முழுவதும் தேசிய கொடிகள்
வடக்கு - கிழக்கு மாகாணங்களில் சுதந்திர தினத்தினை கரிநாளாக அனுஸ்ரித்து வருகின்ற இந்நிலையில் வவுனியா நகர் முழுவதும் தேசிய கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன.
வவுனியா ஏ9 வீதியின் இரு பகுதிகளிலும், மணிக்கூட்டு கோபுர சந்தி, வைத்தியசாலை சுற்றுவட்டம், பண்டார வன்னியன் சதுக்கம் ஆகிய பகுதிகளில் இலங்கையின் தேசிய கொடி பறக்கவிடப்பட்டுள்ளன.
சுதந்திர தினத்தினை கரிநாளாக அனுஸ்ரித்து தமிழ் தேசிய அரசியல் கட்சிகளின் ஏற்பாட்டிலும், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டிலும் சுதந்திர தினமான இன்றையதினம் (04.02) வடக்கு, கிழக்கின் சில மாவட்டங்களில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் வவுனியாவில் இவ்வாறு கொடிகள் பறக்க விடப்பட்டுள்ளன.
மேலதிக செய்திகள்: திலீபன்