கால்நடைகளால் வீதி விபத்துக்கள் அதிகரிப்பு: விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள் (Video)
கிளிநொச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இரவு வேளையில் கட்டாக்காலி கால்நடைகள் பிரதான வீதிகளில் அலைந்து திரிவதால் வீதிகளில் பயணிக்கும் பாதசாரிகள் மற்றும் வாகன சாரதிகள் தினமும் வீதி விபத்துக்களைச் சந்திப்பதாக விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பாதிக்கப்படுபவர்கள் மேலும் கூறுகையில்,
உரிமையாளர்கள் கால்நடைகளை தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்காத காரணத்தினால் கால்நடைகள் இரவு வேளைகளில் பிரதான வீதிகளில் அலைந்து திரிகின்றன.
இதன் காரணமாக வீதிகளில் பயணிக்கும் பாதசாரிகள் மற்றும் வாகன சாரதிகள் தினமும் வீதி விபத்துக்களைச் சந்திக்க நேரிடுகிறது.
அந்தவகையில் ஏ 35 பரந்தன் - முல்லைத்தீவு வீதியில் தற்பொழுது கால்நடைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. கண்டாவளை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மூன்று நாட்களில் 6 கால்நடைகள் வீதி விபத்துகளில் இறந்துள்ளன.
இதன் காரணமாக வாகன சாரதிகளும் காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலை ஏற்பட்டுள்ளது.
ஆகவே கால்நடை உரிமையாளர்கள் பாதசாரிகளின் நலன் கருதியும் வாகன சாரதிகளின் நலன் கருதியும் தமது கால்நடைகளை இரவு வேளைகளில் தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும்.
மேலும் இவ்வாறான விபத்துகளால் விலை மதிப்பற்ற உயிர்களைக் காவு கொள்ளும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
கால்நடைகளைக் கட்டுப்படுத்துமாறு கமநல சேவைத் திணைக்களம் மற்றும் பிரதேச சபையினர் மற்றும் பொலிஸாரிடம் பலமுறை தெரிவித்தும் எந்த அதிகாரிகளும் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படாத காரணத்தினால் தான் தினமும் வீதி விபத்துகளை சந்திக்க நேரிடுகிறது.
எனவே இது தொடர்பாகச் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு
கேட்டுக்கொள்கிறோம் என கோரியுள்ளனர்.





