தொடர்ந்து அதிகரிக்கும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள்
இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு, செத்தல் மிளகாய் மற்றும் பெரிய வெங்காயம் ஆகியவற்றின் விலைகள் அதிகரித்துள்ளதாக அத்தியாவசியப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் எஸ். விநாயகசுந்தரம் தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவித்துள்ள அவர்,
இந்தியாவிலிருந்து நாட்டிற்கு செத்தல் மிளகாய் ஏற்றுமதி செய்வது இடைநிறுத்தப்பட்டுள்ளமையே அதன் விலை அதிகரிப்புக்குக் காரணம் என குறிப்பிட்டுள்ளார்.
மிளகாயின் விலை
தரநிலைகளுக்கு உட்படாததாகக் கூறப்படும் காய்ந்த மிளகாய் அடங்கிய 100 இற்கும் மேற்பட்ட கொள்கலன்களை சுங்கத் திணைக்களம் தடுத்து வைத்துள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் சந்தன புஞ்சிஹேவா அண்மையில் தெரிவித்திருந்தார்.
இலங்கை தர நிர்ணய நிறுவனம் மற்றும் உணவு ஆய்வாளர்களால் நிராகரிக்கப்பட்ட இந்த செத்தல் மிளகாயை உள்நாட்டுச் சந்தைக்கு விநியோகிக்காமல், மீண்டும் ஏற்றுமதி செய்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, இந்திய வர்த்தக சங்கங்கள் நாட்டிற்கு செத்தல் மிளகாய் ஏற்றுமதி செய்வதை நிறுத்தியுள்ளதாக விநாயகசுந்தரம் குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாக, உள்நாட்டுச் சந்தையில் ஒரு கிலோகிராம் உலர் மிளகாயின் விலை தற்போது 1,300 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.
மேலும், எல் நினோ காலநிலைத் தாக்கம் காரணமாக இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காயத்தின் விலைகளும் சுமார் 10 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.