தாதியரின் ஓய்வு பெறும் வயது குறித்து வெளியான தகவல்
தாதியர் உட்பட சில சுகாதார சேவைகளில் பணிபுரிவோரின் ஓய்வு பெறும் வயதை 61 ஆக அதிகரிப்பதற்கான அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ரமேஸ் பத்திரன(Ramesh Pathirana) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட (Gamini Waleboda) இன்று (07.05.2024) நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார்.
நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கு
தாதியர் மற்றும் சில சுகாதார சேவையாளர்களின் ஓய்வூதிய வயதை 63 ஆக நீடிக்க தீர்மானம் எடுக்கப்பட்ட போதிலும் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை.
இதன் காரணமாக இரத்தினபுரியில் உள்ள தாதியர் பயிற்சிப் பாடசாலையின் அதிபர் ஓய்வு பெற்று தற்போது வேறு ஒருவரிடமோ அல்லது அடுத்த அதிபரிடமோ கடமைகளை ஒப்படைக்காமல் வைத்தியசாலையில் தங்கியுள்ளார் என்று வலேபொட குறிப்பிட்டுள்ளார்.
ஓய்வு பெறும் வயது 63 என்பது நடைமுறைப்படுத்தப்படுமா? இல்லையா? என்பது திணைக்களத் தலைவர்களுக்குக் கூடத் தெரியாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்குப் பதிலளித்த சுகாதார அமைச்சர் ரமேஸ் பத்திரன, இந்த விவகாரம் தொடர்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும், பெரும்பாலும் 61க்கு மேல் ஓய்வு நீடிப்பு இருக்காது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, புதிதாக சுமார் 3,000 தாதியர்களை இணைத்துக் கொள்ள உள்ளதாகவும் இதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டு நேர்முகத் தேர்வுகள் நிறைவடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |