இலங்கையில் இளைஞர்களிடையே எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு
இலங்கையில் 20 முதல் 24 வயதுக்குட்பட்ட இளைஞர்களிடையே எச்.ஐ.வி தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டம் தெரிவித்துள்ளது.
2026 ஆம் ஆண்டின் முதல் மூன்று காலாண்டுகளில், 15 முதல் 24 வயதுக்குட்பட்டவர்களிடையே புதிதாக 88 எச்.ஐ.வி தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்களில் 78 பேர் 20 முதல் 24 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் என தேசிய பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டம் குறிப்பிட்டுள்ளது.
பரிசோதனைகளின் அவசியம்
சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய தேசிய பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் ஆலோசகர் சமூக வைத்திய நிபுணர் மாதவி குணரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.
2026 ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டு நிறைவடையும் போது, இலங்கையில் புதிதாக 708 எச்.ஐ.வி தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், இலங்கையில் 1987 ஆம் ஆண்டு முதலாவது எச்.ஐ.வி தொற்று கண்டறியப்பட்டதிலிருந்து, 2026 ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டு முடிவில் மொத்தமாக 8,111 எச்.ஐ.வி தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த நிலையில், இளைஞர்கள் மத்தியில் எச்.ஐ.வி தொடர்பான விழிப்புணர்வு, பாதுகாப்பான பாலியல் நடைமுறைகள் மற்றும் உரிய மருத்துவப் பரிசோதனைகளின் அவசியம் மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது.