வடக்கு கிழக்கு மக்களை சமய ரீதியில் போருக்கு அழைக்கும் சம்பவங்கள்: மா.சத்திவேல்
வடக்கு கிழக்கு மக்களை சமய ரீதியில் விரைந்து போருக்கு அழைப்பதாகவே அண்மைய சம்பவங்கள் நடக்கின்றன என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் (04.05.2023) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, யுத்த வலிகளோடு அன்றாட வாழ்வியல் போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கும் வடக்கு கிழக்கு மக்களை சமய ரீதியில் விரைந்து போருக்கு அழைப்பதாகவே அண்மைய சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.
பௌத்த - இந்து மோதல்
படையினரின் தேவைக்குத் தொடர்ந்து நிலங்களை ஆக்கிரமிப்பு செய்பவர்களே தற்போது புதிது புதிதாகப் பௌத்த சின்னங்களையும், விகாரைகளையும், தூபிகளையும் அமைத்து ஆக்கிரமிப்பிற்கு புதிய வடிவம் கொடுப்பதோடு, இன்று பௌத்த- இந்து நேரடி மோதலுக்கும் வலிந்து அழைக்கின்றனர் என்பதை வலிகாமம் வடக்கு தையிட்டி நிகழ்வு எடுத்துக் காட்டுகின்றது.
அரசியல் உள்நோக்கம் கொண்ட இச் செயற்பாட்டினை சமயம் கடந்து அனைத்து தரப்பினரும் தமது எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும்.
உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்போடு கத்தோலிக்க மற்றும் முஸ்லிம்களுக்கு இடையில் மோதலை தூண்டி அரசியல் குளிர்காய நினைத்த சக்திகளும், அவர்களை இன்றும் பாதுகாக்கும் சக்திகளுமே அரச பயங்கரவாதத்தின் துணைகொண்டு தற்போது பௌத்த- இந்து மோதலை வடக்கிலே ஆரம்பிக்க முனைப்புக் காட்டுகின்றன.
கிறிஸ்தவ தலைமைத்துவங்கள்
இதனை சமய நல்லிணக்கம் விரும்பும் அனைவரும் இதனைக் கண்டிப்பதோடு தனது பலத்த எதிர்ப்பையும் வெளிப்படுத்த வேண்டும்.
அடாத்தாக பௌத்த சின்னங்களை வைப்பதையும், விகாரைகள், தூபிகள் அமைப்பதையும் ஒரு சில கிறிஸ்தவ சமய அடிப்படை வாத சக்திகள் கட்டாய மதமாற்றத்தில் ஈடுபடுவதையும் சமய நல்லிணக்கம் விரும்பும் எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
இத்தகைய அநாகரீக செயல் கண்டிக்கப்பட வேண்டியதே. இந்நிலையில் கிறிஸ்தவ தலைமைத்துவங்கள் அறிக்கைகளுக்கு மட்டும் தம்மைக் கட்டுப்படுத்தி விடாது ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்தோடு கைகோர்த்து எழுந்து நிற்பதே தேசியத்தைப் பாதுகாக்கும் காலத்தின் அரசியல் செயற்பாடாகும்.
நில ஆக்கிரமிப்பிற்கும், புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்திற்கும் எதிர்ப்பு தெரிவித்து வடகிழக்கில் கடையடைப்பு செய்த அனைத்து தரப்பினரும் தமிழ் மக்களின் தேசிய நலன் கருதி ஒன்றிணைய வேண்டிய காலம்.
இராணுவ மயம் தொடர்கின்றது
தையிட்டி மக்களுக்கு அவர்களுக்குரிய காணிகளைப் பெற்றுக் கொடுக்கும் செயற்பாட்டில் ஈடுபடுவது பிரதேசத்தையும், மக்களையும் பாதுகாக்கும் செயல் என்பதோடு தாயகத்தைக் காப்பதற்கான எதிர்கால செயற்பாட்டுக்கும் துணை செய்யும்.
இந்தியாவின் அரசியல் பிடிக்குள் இருந்து இலங்கை தம்மை விடுவித்துக் கொள்ள நினைக்கும் பின்னணியில் அதனை உணர்ந்து செயல்படும் இந்தியா அன்று உணவு பொட்டலங்களைப் பலவந்தமாகக் கொண்டு வந்து போட்டது போன்று எந்த காரியத்தையும் அவசரமாகப் போவதில்லை.
இந்தியாவின் அமைதி காத்தலைப் பாவித்து பௌத்த மட்டும் இராணுவ
மயம் தொடர்கின்றது. அரசியல் நுண் அறிவோடும் மக்கள் சக்தியோடும் முன்னெடுக்கும்
நகர்வுகளே ஆக்கிரமிப்பைத் தடுக்கும்.இலக்கு நோக்கிய அரசியல் பயணத்திற்கும்
வழிவகுக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

கடலுக்கு அடியில் மிகப்பெரிய ஜாக்பாட்டை கண்டுபிடித்த இந்தியாவின் நட்பு நாடு.., ஆனால் ஒரு சிக்கல் News Lankasri
