ஜனாதிபதித் தேர்தலில் தமிழர் ஒருவரை களமிறக்க வேண்டும்: ஜனா எம்.பி வலியுறுத்து(Photos)
நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் வடக்கு கிழக்கு மக்கள் நன்கு அறிந்த தமிழர் ஒருவரை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்க வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு குருக்கள்மடம் கலைவாணி வித்தியாலயத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று (24.12.2023) நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் தெரிவிக்கையில்,
வேறுபாடுகள் காட்டப்படுகின்றன
தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களிலுள்ள ஆயுள்வேத வைத்தியசாலைகளில் வைத்தியர்கள் நன்றாக கடமையாற்றினாலும் அங்குள்ள போதனா வைத்தியசாலைகளில் வளப்பற்றாக்குறைகள் நிலவுகின்றன.மேலும், சில வைத்தியசாலைகள் கவனிப்பாரற்றுக்கிடக்கின்றன.
அரசியல்வாதிகளால் மாத்திரமின்றி, அமைச்சில் இருக்கின்ற ஒருசில அதிகாரிகளாலும் வேறுபாடுகள் காட்டப்படுகின்றன.
மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல்தரைப் பிரச்சனை 100 நாட்களைக் கடந்து இன்னும் தீர்க்கப்படவில்லை, 2000 நாட்களைக் கடந்தும் காணாமலாக்கப்பட்டவர்களின் போராட்டங்கள் இன்னும் தொடர்கின்றன.
ஆரம்பத்திலே எமது தலைவர்கள் சமஸ்டி கேட்டு போராடினார்கள். பின்னர் ஆயுதப்போராட்டம் அதன்பின் 2009இல் போராட்டம் மௌனிக்கப்பட்டது. மீண்டும் சமஸ்டியை நோக்கி தமிழ் தலைவர்கள் போராடிக் கொண்டு வருகின்றார்கள். இது கிடைக்காவிட்டால் அடுத்து என்ன நடக்கும் என்று தெரியாது.
ஜனாதிபதித் தேர்தலில் தமிழர்கள் ஒன்றாக இருக்க வேண்டும். இந்த அரசியல் சூழ்நிலையில் எம்மை மாற்றுவதற்கு சந்தர்ப்பம் கிடைத்திருக்கின்றது. முரண்பட்ட கட்சிகள் அனைத்தும் 2001 இல் ஒன்றிணைந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கி 2009 வரைக்கும் தமிழர்கள் மிகவும் ஒற்றுமையாக சர்வதேசத்திற்குக் காட்டினார்கள். அந்த நிலைமை மீண்டும் உருவாக வேண்டும்.
தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்
அடுத்த ஆண்டு இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு கிழக்கு மக்கள் நன்கறிந்த ஒருவரை வேட்பாளராக களமிறக்கி தமிழ் மக்கள் ஒன்றிணைந்து வாக்களிக்க வேண்டும்.
தமிழ் மக்கள் ஒன்றிணைந்து வாக்களிக்கும் போது தெற்கில் எந்தவொரு வேட்பாளராலும் 50 சதவீதத்தை கூட எட்ட முடியாத குழப்பமான சூழ்நிலை உருவாகும்.
இதனால், தமிழ் மக்களின் வாக்குகள் தேவைப்படும். அப்போது சர்வதேசத்தின் உதவியுடன் நாம் ஓர் ஒப்பந்தத்தை செய்து கொள்ளலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் ஜனா கருணாகரம் மேலும் குறிப்பிட்டார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |