பாடசாலைகளுக்கு தரம் குறைந்த தளபாடம் விநியோகம்: இம்ரான் எம்.பி குற்றச்சாட்டு
தேசிய மக்கள் சக்தி ஆட்சியில், கிழக்கு மாகாண பாலர் பாடசாலைகளுக்கு மிகவும் தரம் குறைந்த தளபாடங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் குற்றம் சுமத்தியுள்ளார்.
ஊடகங்களுக்கு அவர் இன்று(22.01.2026) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தரமற்ற தளபாடங்கள்
இது தொடர்பில் அறிக்கையில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
2025ஆம் ஆண்டு மாகாண அபிவிருத்தி நிதி மூலம், பல பாலர் பாடசாலைகளுக்கு தளபாடங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. இந்த தளபாடங்கள் மிகவும் தரம் குறைந்தவை.
பிள்ளைகளுக்கு பெரிதும் ஆபத்து விளைவிக்கக் கூடியவை என மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த சில பெற்றார் விநியோகிக்கப்பட்ட தளபாடங்களின் புகைப்படத்துடன் எனது கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.

விநியோகிக்கப்பட்டுள்ள தளபாடங்களின் புகைப்படங்களை அவதானிக்கும் போது உண்மையில் இந்த தளபாடங்கள் பணம் கொடுத்து கொள்வனவு செய்யப்பட்டதா? அல்லது எங்கோ கழித்து ஒதுக்கப்பட்டவை பெறப்பட்டதா என்ற கேள்வி எழுகின்றது.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஊழலுக்கு எதிரான அரசாங்கம் என்று மேடைகளிலும், பொது சபைகளிலும் உரத்த தொனியில் பேசப்படுகின்றது.
இந்த அரசாங்கத்தில் தான் இந்த ஊழல் மோசடி இடம்பெற்றுள்ளது. கிழக்கு மாகாண பாலர் பாடசாலை பணியக தவிசாளர் மற்றும் பணிப்பாளர்களை கிழக்கு மாகாண ஆளுநர் தான் நியமித்துள்ளார்.
ஊழல்
அப்படியாயின், இந்த நிர்வாகம் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் நிர்வாகமாகும். இந்த நிர்வாகம் கொள்வனவு செய்து விநியோகித்துள்ள தளபாடங்களின் நிலைதான் இதுவா?
மேலும், தேசிய மக்கள் அரசாங்கத்தின் ஊழலற்ற ஆட்சி என்பதை பொதுமக்கள் சிந்தித்து பார்க்க வேண்டும். இந்த அரசாங்கம் சொல்வது போல் எதுவும் செய்வதில்லை என்பதற்கு மற்றுமொரு உதாரணம் இதுவாகும்.

இந்த ஆட்சியாளர்கள் தான் ஊழல் பேர்வழிகளை பதவிகளுக்கு நியமிக்கின்றார்கள். அவர்கள் ஊழல் செய்கின்றார்கள்.
இந்த நிலையில், எப்படி இவர்கள் ஊழலை ஒழிப்பார்கள். ஊழலை ஒழிப்பதாக இன்னும் எத்தனை நாட்களுக்கு பொதுமக்களை இந்த அரசாங்கம் ஏமாற்ற முடியும் எனக் கேட்க விரும்புகின்றேன்.
இந்த தளபாடக் கொள்வனவு மோசடியில் ஆளுநர் செயலகத்தை சேர்ந்தோருக்கும் பங்கு இருக்கலாம் என்ற சந்தேகம் தெரிவிக்கப்படுகின்றது. இந்த கொள்வனவு குறித்து உண்மையாக ஆராய்ந்தால் இந்த உண்மையையும் கண்டுபிடிக்க முடியும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
கணவருடன் ரொமான்டிக் mirror selfie! VJ பிரியங்கா - வசி ஜோடியின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பாருங்க Manithan