இம்ரான் கானை அரசு மருத்துவமனையில் பரிசோதித்ததற்கு எதிராக மனு: பாகிஸ்தான் அரசு மீது பி.டி.ஐ. வழக்கு
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை உச்சநீதிமன்றம் உத்தரவிட்டவாறு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லாமல், அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றமைக்காக பாகிஸ்தான் அரசாங்கத்திற்கு எதிராக அவரது பாகிஸ்தான் தெஹ்ரீக்-ஏ-இன்சாப் (பி.டி.ஐ.) கட்சி நீதிமன்ற அவமதிப்பு மனுவைத் தாக்கல் செய்துள்ளது.
இம்ரான் கானின் உடல்நிலை மோசமடைந்து வருவது குறித்து தொடர்ச்சியாக கவலைகள் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, அவரை இஸ்லாமாபாத்தில் உள்ள தனியார் ஷிஃபா சர்வதேச மருத்துவமனைக்கு மாற்றி மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு அரசாங்கத்திற்கு உத்தரவிட்டிருந்தது.
அனுமதி மறுப்பு
எனினும், அதிகாரிகள் அவரை வெள்ளிக்கிழமை இஸ்லாமாபாத்தில் உள்ள அரசுக்கு சொந்தமான பாகிஸ்தான் மருத்துவ அறிவியல் கழகத்திற்கு (PIMS) அழைத்துச் சென்று குறுகிய நேரப் பரிசோதனையின் பின்னர் மீண்டும் சிறையில் அடைத்துள்ளனர்.
அத்துடன், அவரது தனிப்பட்ட மருத்துவருக்கு அவரைச் சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அரசாங்கத்தின் இந்நடவடிக்கையானது நீதிமன்ற உத்தரவை மீறும் செயல் எனக் குறிப்பிட்டுள்ள பி.டி.ஐ. கட்சி, பிரதமர், சட்ட அமைச்சர் மற்றும் செய்தித் துறை அமைச்சர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கோரி இந்த அவமதிப்பு மனுவைத் தாக்கல் செய்துள்ளது.
பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காரணமாகவே அவர் தனியார் மருத்துவமனைக்கு பதிலாக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக பாகிஸ்தான் செய்தித் துறை அமைச்சர் அத்தாவுல்லா தாரார் விளக்கம் அளித்துள்ளார்.
எனினும், சிறையில் தனது சகோதரர் தொடர்ச்சியாக சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுவதாக இம்ரான் கானின் சகோதரி உஸ்மா கான் குற்றம் சாட்டியுள்ளார்.