பிரித்தானியாவின் பிரபல பல்கலைக்கழகத்தின் வேந்தர் பதவிக்கு விண்ணப்பித்துள்ள இம்ரான் கான்
பிரித்தானியாவின் பிரபல பல்கலைக்கழகத்தினல் ஒன்றான ஆக்ஸ்போர்ட்(Oxford) பல்கலைக்கழகத்தின் வேந்தர் பதவிக்கு பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான்(Imran Khan) விண்ணப்பித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இம்ரான் கான் தற்போது சிறையில் உள்ள நிலையில், இந்த தகவலை அவரது பாகிஸ்தான் தீரிகே-இ-இன்சாப் (PTI) கட்சியின் லண்டன் அடிப்படையிலான பேச்சாளர் சையத் சுல்பிகார் புகாரி உறுதிப்படுத்தியுள்ளார்.
விண்ணப்ப பரிசீலனை
மேலும், “இம்ரான் கான் தனது குழுவிற்கு விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டுமென உத்தரவு அளித்தார். விண்ணப்பத்தின் பரிசீலனை தற்போது நடைபெறுகிறது.
இது ஒரு மரியாதைக்குரிய பதவியாகும். இம்ரான் கான் போன்ற பாரிய பெயர் ஒரு வேந்தராக தேர்வு செய்யப்பட்டால் அது சிறந்தது.
ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தின் படி, வேந்தர் பதவிக்கான 10 வருட காலத்திற்கு விண்ணப்பிக்கும் வேட்பாளர்களின் பட்டியல் ஒக்டோபரில் வெளியிடப்படும், மேலும் வாக்குப்பதிவு மாத இறுதியில் நடைபெறும்.
பிரித்தானிய ஊடகங்களின் படி, முன்னாள் வெளியுறவுத் துறைச் செயலர் வில்லியம் ஹேக் மற்றும் முன்னாள் ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக ஆணையாளர் பீட்டர் மாண்டல்சன் போன்ற பிரபலங்களும் வேட்பாளர் பட்டியலில் உள்ளனர்.
இந்நிலையில் இம்ரான் கான் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் வேந்தரானால், இப்பதவியை வகிக்கும் ஆசிய வம்சாவளியைச் சேர்ந்த முதல் நபராக இருப்பார்.
இது பாகிஸ்தானுக்கு மட்டுமல்ல, ஆசியா மற்றும் உலகம் முழுவதற்கும் ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாக இருக்கும்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.