நெடுஞ்சாலைகளில் சீரற்ற தெருவிளக்கு அமைப்பு: வீதி அபிவிருத்தி அதிகாரசபையை குற்றம் சுமத்தும் சாரதிகள்
அதிவேக நெடுஞ்சாலைகளில் சீரான தெருவிளக்கு அமைப்பு இல்லாததால் ஏற்படும் சிரமங்களுக்கு வீதி அபிவிருத்தி அதிகாரசபையே காரணம் என வாகன சாரதிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
2020ஆம் ஆண்டு முதல், கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை மற்றும் வெளி மாவட்ட அதிவேக நெடுஞ்சாலையின் கடவத்தை - கெரவலப்பிட்டிய பகுதி போன்றவற்றில் தெரு விளக்குகள் இயங்காதுள்ளது.
இதனால், வழக்கமாக அதிவேக நெடுஞ்சாலையைப் பயன்படுத்துபவர்களின் பார்வைத் திறன் பாதிக்கப்படுவதாக கூறப்படுவதோடு பல இடங்களில் தெரு விளக்குகள் எரிவதில்லை எனவும் வாகன ஓட்டிகள் கூறுகின்றனர்.
வாகன ஓட்டிகள் கவலை
மேலும், கொழும்பிற்கும் கட்டுநாயக்கவிற்கும் இடையிலான நெடுஞ்சாலையில் மோசமான வெளிச்சம் காரணமாக விபத்துக்கள் ஏற்படும் ஆபத்துக்கள் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அத்துடன், அதிவேக நெடுஞ்சாலையை பராமரிப்பதற்காக தாம் கட்டணங்களை செலுத்துகின்ற போதிலும், நெடுஞ்சாலைகளில் சரியான விளக்குகளை உறுதி செய்ய அதிகாரிகள் பொறுப்புடன் செயற்படவில்லை என வாகன ஓட்டிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
எனினும், “போதைக்கு அடிமையானவர்கள் இணைப்புகளை துண்டிப்பதன் காரணமாகவே தெரு விளக்குகள் எரிவதில்லை என்று வீதி அதிகாரசபை காரணம் கூறுகிறது.
காவல்துறையினருடன் சிறப்பு சந்திப்பு
அண்மையில், இராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்த மற்றும் அவரது தனிப்பட்ட பாதுகாப்பு உத்தியோகத்தர் ஆகியோரின் மரணத்திற்கும், கொழும்பு-கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் சரியான வெளிச்சமின்மை காரணமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.
இந்நிலையில், அதிவேக நெடுஞ்சாலை பாதுகாப்பு குறித்து விவாதிக்க அடுத்த வாரம் காவல்துறையினருடன் சிறப்பு சந்திப்பை ஏற்பாடு செய்துள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
அத்துடன், அதிவேக நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் பயணிப்பதற்கு ஏற்ற வகையில், வாகனங்களின் முன் மற்றும் பின்பக்க விளக்குகள் சரியாக உள்ளனவா என்பதை முழுமையாகச் சோதனையிடுமாறும் காவல்துறையினரைக் கேட்டுக் கொள்வதாகவும் குறித்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |