அனுமதிப் பத்திர நிபந்தனையை மீறி மணல் அகழ்வில் ஈடுபட்ட மூவருக்கு அபராதம் விதிப்பு
மட்டக்களப்பு - வெல்லாவெளியில் சட்டவிரோதமாக உழவு இயந்திரத்தில் மணல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் மற்றும் அனுமதிப் பத்திர நிபந்தனையை மீறி மணல் அகழ்வில் ஈடுபட்ட ஒருவர் உட்பட 3 பேருக்கு 3 இலட்சத்து 25 ஆயிரம் ரூபாவை தண்டப்பணமாகச் செலுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிமன்ற மேலதிக நீதவான் நீதிபதி கருப்பையா ஜீவராணி நேற்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
வெல்லாவெளி பொலிஸ் பிரிவிலுள்ள மூங்கிலாறு பகுதியில் சட்டவிரோதமாக உழவு இயந்திரத்தில் மணல் அகழ்வில் ஈடுபட்ட இருவரும், அனுமதிப் பத்திர நிபந்தனையை மீறி மணல் அகழ்வில் ஈடுபட்ட ஒருவரும் உட்பட மூன்று பேர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டதுடன் 3 உழவு இயந்திரங்கள் மணலுடன் மீட்கப்பட்டுள்ளன.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களை களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிமன்ற மேலதிக நீதவான் கருப்பையா ஜீவராணி முன்னிலையில் நேற்று ஆஜர்படுத்திய போது சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட இருவருக்கும் தலா ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபா வீதம் 3 லட்சம் ரூபாவையும், அனுமதிபத்தர நிபந்தனையை மீறி மணல் அகழ்வில் ஈடுபட்ட ஒருவருக்கு 25 ஆயிரம் ரூபாவையும் தண்டப்பணமாக செலுத்துமாறு உத்தரவிட்டுத் தீர்ப்பளித்துள்ளார்.



