யாழ்ப்பாணம் கலாசார மையம் தொடர்பில் மாநகர சபையில் முக்கிய தீர்மானம் நிறைவேற்றம்
யாழ்ப்பாணம் கலாசார மையத்தினை யாழ்ப்பாணம் மாநகரசபை பொறுப்பில் எடுப்பதற்கான நடவடிக்கையினை தீவிரப்படுத்த வேண்டும் என யாழ். மாநகர சபையில் ஏகமனதாக தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
யாழ் மாநகரின் மாதாந்த அமர்வு இன்று(11.06.2026) முதல்வர் மதிவதனி தலைமையில் இடம்பெற்றுள்ளது.
தீர்மானம் நிறைவேற்றம்
இதன்போது, கலாசார மத்திய நிலையத்தின் பராமரிப்பு குறித்து விவாதிக்கப்பட்ட நிலையிலேயே இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

குறித்த தீர்மானத்தில், கடந்த 2014 ஆண்டு ஜூன் மாதம் ஒன்பதாம் திகதி கைச்சாத்திடப்பட்ட இரு தரப்பு உடன்படிக்கைக்கு அமைவாக பூர்த்தி செய்யப்பட்ட இந்த கட்டிடத்தை யாழ்ப்பாணம் மாநகரசபையிடம் விரைவாக கையளிக்க வேண்டும் எனவும், எந்தவித நம்பிக்கை பொறுப்பு கட்டமைப்பு (TRUST) உருவாக்கப்படுவதற்கு இந்த சபை உடன்படவில்லை எனவும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில், இலங்கைக்கான இந்திய உயர் ஆணையர், புத்தசாசன - சமய மற்றும் கலாசார அமைச்சர் இருவரிடம் கோரிக்கை முன்வைப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.