கோவிட் தடுப்பூசி தொடர்பில் வெளியான முக்கிய அறிவித்தல்
இரண்டாவது கோவிட் தடுப்பூசியைப் பெற்று மூன்று மாதங்களின் பின்னர் கட்டாயம் பூஸ்டர் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளுமாறு ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோய் எதிர்ப்பு மற்றும் மரபணு உயிரியல் நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தனது ட்விட்டர் பதிவொன்றிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
"நாட்டில் பயன்படுத்தப்படும் கோவிட் தடுப்பூசிகளால் உருவாக்கப்படும் நோய் எதிர்ப்பு சக்தி மூன்று மாதங்களில் குறைவடைகின்றது. இதற்கமைய சினோபார்ம் தடுப்பூசியால் உருவாக்கப்படும் எதிர்ப்பு சக்தி விரைவாகக் குறைவடைகின்றமை ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
இரண்டாவது தடுப்பூசியாக மொடர்னா தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகவுள்ளது. இதனைத் தொடர்ந்து ஸ்புட்னிக் – வி, அஸ்ட்ராசெனகா மற்றும் ஸ்புட்னிக் – வி முதலாம் தடுப்பூசிகள் முறையே எதிர்ப்பு சக்தியை அதிகமாக வெளிப்படுத்தியுள்ளன.
சினோபார்ம் தடுப்பூசி தற்போது அதிகளவில் பயன்படுத்தப்படும் கோவிட் தடுப்பூசியாகும். இந்நிலையில் இலங்கையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை மற்றும் மரணித்தவர்களின் எண்ணிக்கை என்பன குறைவடைந்தமைக்குச் சினோபார்ம் தடுப்பூசி சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ளது.
எவ்வாறாயினும் முதல் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்று கோவிட் தொற்று உறுதியானவர்கள் ஆறு மாதங்களுக்குப் பின்னர் பூஸ்டர் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
If you are Sinopharm vaccinated - get your booster 3 months after completing your primary COVID-19 vaccination series.
— Chandima Jeewandara (@chandi2012) December 16, 2021