மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையால் நடைமுறைப்படுத்தப்படும் புதிய நடைமுறைகள்
2026ஆம் ஆண்டில் மேலும் பல நல்ல செயற்றிட்டங்களை மேற்கொள்வதற்காக நாம் ஏற்கனவே உருவாக்கிய உப விதிகள் இவ்வருட ஆரம்பத்திலிருந்து நடைமுறைப்படுத்தப்படும் என மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் தெரிவித்துள்ளார்.
களுதாவளையில் அமைந்துள்ள பிரதேச சபையில் வியாழக்கிழமை(01.01.2026) மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அனைவருக்கும் எதிராகவும் சட்ட நடவடிக்கை
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், இவ்வருடம் 2026ஆம் ஆண்டில் மேலும் பல நல்ல செயற்றிட்டங்களை மேற்கொள்வதற்காக நாம் ஏற்கனவே உருவாக்கிய உப விதிகள் இவ்வருடம் ஆரம்பத்திலிருந்து நடைமுறைப்படுத்தப்படும்.

இது எமது பிரதேச எல்லைக்குட்பட்ட கிராமங்கள் அனைத்திலும் நிறைவேற்றப்படும்.
இந்த உப விதி சட்டத்திற்கு மாறாக யாரும் எதிர்த்தாலோ அல்லது இதை கடைப்பிடிக்காது அதை நடைமுறைப்படுத்தாத அனைவருக்கும் எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
அந்தவகையில் ஞாயிற்றுக்கிழமைகளில் கல்வி பொதுத்தராதர சாதாரண தரம், உயர்தரம் ஆகிய மாணவர்களுக்கான பகுதிநேர வகுப்புகள் தவிர்ந்த ஏனைய பகுதிநேர வகுப்புக்கள் அனைத்து தனியார் கல்வி நிலையங்களிலும், வகுப்புகள் நடத்த முடியாது.
எந்த ஒரு தனியார் கல்வி நிலையங்களிலும் மாணவர்களுக்கு கொடுப்பனவு இல்லாமல் மாணவர்களை கல்வி நிலையங்களுக்கு அனுமதிக்க வேண்டும்.
கல்விப் பொதுத்தராதர உயர்தர மாணவர்களைத் தவிர்த்து ஏனைய மாணவர்கள் அனைவருக்கும் ஒரு மணித்தியாலத்திற்கு 50 ரூபா மாத்திரம் ஒரு பாட வேளைக்காக தனியார் கல்வி நிலையங்கள் அறவிட வேண்டும்.
அனைத்து தனியார் கல்வி நிலையங்களும் சுகாதார முறையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். அனைத்து தனியார் கல்வி நிலையங்களும் எமது பிரதேச சபையில் பதிவு செய்யப்பட வேண்டும்.
நாளாந்தம் வட்டி அளவிடும் நடைமுறை
6.5 மில்லியன் செலவில் துறைநீலாவணையில் ஆங்கில பாலர் பாடசாலை ஒன்றை எமது பிரதேச சபையினால் நாம் நடாத்தவுள்ளோம். இது இந்த மாதம் திறந்து வைக்கப்படவுள்ளது.
எமது பிரதேச எல்லைக்குட்பட்டிருக்கின்ற நுண் கடன் நிதி நிறுவனங்களில் 34 நிறுவனங்களே பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர்கள் மத்திய வங்கியின் சட்ட திட்டங்களுக்கு ஏற்ற வகையிலும், நடைமுறைகளுக்கு ஏற்றவாறு மக்களுக்கு கடன் வசதிகளை வழங்கலாம்.

அதுபோல் எமது பிரதேச எல்லைக்குள் உட்பட்ட நிதி நிறுவனங்கள் எவராக இருந்தாலும் ஒரு இலட்சம் ரூபாய் கடன் வழங்கினால் அதற்கு மாதாந்தம் வட்டியாக இரண்டு வீதம் மாத்திரம்தான் அறவிட முடியும்.
இதனை மீறி அவர்கள் வட்டி வீதங்களை அறவிடுவார்களாக இருந்தால் அவர்களுடைய வியாபார உரிமைச் சான்றிதழ் இரத்து செய்து சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மேலும் இவ்வாறான நிதி நிறுவனங்கள் குழுக் கடன் வசதிகளையோ, நாளாந்தம் வட்டி அளவிடும் நடைமுறைகளையோ எமது பிரதேச எல்லைக்குள் மேற்கொள்ள முடியாது. மாறாக இவர்கள் மாதாந்தம் வட்டி அறவிடலுக்கான கடன் வசதிகளை மாத்திரம்தான் எனது பிரதேச எல்லைக்குள் வழங்க வேண்டும்.
அதுபோல் எமது பிரதேச எல்லைக்குட்பட்ட அடகு வைக்கப்படும் அடகுகளுக்காகவும், மாதாந்தம் இரண்டு வீத வட்டி மாத்திரமேதான் அறவிட வேண்டும். இவற்றை மீறினால் அவர்களுடைய வியாபார சான்றிழும் இரத்தச் செய்யப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
அமெரிக்க பாணியில் பாதுகாப்பு கொள்கைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தும் கனடாவின் இரும்பு மனிதன் News Lankasri
சுவிட்சர்லாந்தில் கேளிக்கை விடுதியில் தீ விபத்து: இத்தாலி மற்றும் பிரான்ஸ் நாட்டவர்கள் பாதிப்பு News Lankasri