தீபாவளிப் பண்டிகை கால பட்டாசு விற்பனையில் பாதிப்பு
கடந்த பண்டிகை காலத்துடன் ஒப்பிடும் போது இம்முறை தீபாவளிப் பண்டிகை காலத்தில் பட்டாசுகள் மற்றும் மத்தாப்பூ விலைகள் அதிகரித்துள்ளதால், தமது வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பிரதேசத்தை சேர்ந்த பட்டாசு வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
பட்டாசு கொள்வனவு செய்வதை தவிர்க்கும் நுகர்வோர்
பட்டாசுகளை விற்பனை செய்ய அரச வெடிப்பொருட்கள் கட்டுப்பாட்டாளரிடம் அனுமதிப்பத்திரத்தை பெற்று தீபாவளிப் பண்டிகை காலத்தில் பட்டாசுகள் மற்றும் மத்தாப்பூக்களை விற்பனை செய்ய ஆரம்பித்ததாகவும் விலை அதிகரிப்பு காரணமாக நுகர்வோர் பட்டாசுகளை கொள்வனவு செய்வதை தவிர்த்து வருவதாகவும் அவர்கள் கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு 80 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட சிறிய பட்டாசு பொதியை இம்முறை 180 ரூபா முதல் 200 ரூபா வரையான விலையில் விற்பனை செய்ய நேரிட்டுள்ளது.
உற்பத்தி செலவுகள் அதிகரிப்பு
இதற்கு இணையாக ஏனைய மத்தாப்பூ வெடிகளின் விலைகளும் 300 வீதம் அதிகரித்துள்ளது.
வெடி மருந்துகளை இறக்குமதி செய்யும் போது அறவிடப்படும் அதிக வரி மற்றும் மத்தாப்பூ தயாரிக்க ஏற்படும் அதிக செலவுகள் காரணமாக உற்பத்தி விலைகளை அதிகரிக்க நேரிட்டுள்ளது என உற்பத்தியாளர்கள் கூறியதாகவும் ஹட்டன் நகரில் பட்டாசு விற்பனையில் ஈடுபட்டுள்ள வர்த்தகர்கள் கூறியுள்ளனர்.