கச்சதீவு விவகாரத்தில் வலுக்கும் பிரச்சாரங்கள்: காங்கிரஸின் கருத்துக்கு மோடி பதிலடி
புதிய இணைப்பு
தேச விரோத செயல்களை வெட்கமின்றி நியாயப்படுத்துவதாக, தேசிய காங்கிரஸ் கட்சியை இந்திய பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக சாடியுள்ளார்.
காங்கிரசின் மூத்த தலைவர் திக்விஜய சிங், கச்சதீவு யாராவது வசிக்காத நாட்டின் காலியான வெறும் நிலமே என்று கூறியமை தொடர்பிலேயே பிரதமர் மோடி, இந்த விமர்சனத்தை வெளியிட்டுள்ளார்.
அந்தவகையில் ராஜஸ்தான் போன்ற எல்லையோர மாநிலத்தின் மக்கள் வசிக்காத நிலங்களையும் எந்த நாட்டிற்கும் காங்கிரஸ் கட்சியால் கொடுக்க முடியுமா? என்று பிரதமர் மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னதாக 1974இல் இந்திரா காந்தியின் அரசாங்கம் கச்சதீவை இலங்கைக்கு தாரை வார்த்ததாக எழ்ந்துள்ள குற்றச்சாட்டுக்கு மத்தியிலேயே திக்விஜய சிங்கின் கருத்தும் வெளியாகியுள்ளது.
முதலாம் இணைப்பு
இந்திய - இலங்கை(India - Sri lanka) உறவில் ஏற்படும் தாக்கங்களை சிந்திக்காமல், மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக பாரதீய ஜனதாக்கட்சி கச்சதீவு(Kachchatheevu) விவகாரத்தை தேர்தல் பிரச்சினையாக மாற்றியுள்ளது என்று பாரதீய ஜனதாக்கட்சி அரசாங்கத்தின் முன்னாள் மத்திய அமைச்சர் யஸ்வந்த் சின்ஹா கூறியுள்ளார்.
கச்சதீவைச் சுற்றி பல தசாப்தங்களாக நிலவும் பிராந்திய மற்றும் கடற்றொழில் உரிமைகள் சர்ச்சை மீண்டும் எழுந்துள்ளது. இது தொடர்பில் பாரதீய ஜனதாவும் எதிர்க்கட்சிகள் வார்த்தைப் போரில் ஈடுபட்டுள்ளன.
இந்தியாவின் நிதியமைச்சராகவும், வெளிவிவகார அமைச்சராகவும் பணியாற்றிய சின்ஹா, கச்சதீவு இலங்கையின் கடல் எல்லையில் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
கச்சதீவு இலங்கையின் பக்கம்
நாட்டின் பிரதமரைத் தவிர வேறு யாரும் இந்தப் பிரச்சினையை எழுப்பவில்லை என்பதில் தாம் திகைப்படைவதாக குறிப்பிட்டுள்ள அவர், சர்வதேச கடல் கோடு வரையப்பட்ட போது கச்சதீவு இலங்கையின் பக்கம் சென்றது.
எனவேதான், இந்த விடயத்தில் இலங்கைக்கு எந்தப் பகுதியையும் விட்டுக்கொடுக்கும் கேள்விக்கே இடமில்லை என்ற நிலைப்பாட்டை இந்திய வெளிவிவகார அமைச்சு மீண்டும் மீண்டும் கொண்டுள்ளது என்று சின்ஹா கூறியுள்ளார்.
எனவே இப்போது இந்தப் பிரச்சினையை எழுப்பினால், அது இலங்கையுடனான உறவைக் கெடுக்கும் என்றுதான் தம்மால் கூற முடியும்.
“நீங்கள் என்ன செய்வீர்கள்? தீவைத் திரும்பப் பெற பலத்தைப் பயன்படுத்தப் போகிறீர்களா? எனவே இது தேர்தல் விவகாரம் தவிர வேறில்லை என்று சின்ஹா தெரிவித்துள்ளார்.
இந்த தேர்தலில், நீங்கள் பல பிரச்சினைகளை எழுப்புகிறீர்கள். ஆனால் நீங்கள் எழுப்பும் பிரச்சினைகளின் தாக்கங்கள் குறித்து நீங்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.
இலங்கையுடனான நமது இருதரப்பு உறவில் ஏற்படப்போகும் தாக்கங்களை சிறிதும் பார்க்காமல் பிரதமர் இங்கு இந்த விவகாரத்தை எழுப்பியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |