அமெரிக்க வரிகளின் தாக்கம்: இலங்கை முதலீட்டு சபையின் தீர்மானம்
அண்மையில் விதிக்கப்பட்ட அமெரிக்க பரஸ்பர வரிகளால் பாதிக்கப்படக்கூடிய ஏற்றுமதித் துறைகளுக்கு நிவாரணம் வழங்க தேவையான ஒருங்கிணைப்பு முயற்சிகள் நடந்து வருவதாக இலங்கை முதலீட்டு சபை அறிவித்துள்ளது.
இந்த நடவடிக்கைகள் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் வழிகாட்டுதலின் கீழ் செயற்படுத்தப்படுவதாக சபையின் தலைவர் அர்ஜுன ஹேரத் தெரிவித்துள்ளார்.
இலங்கை தற்போது ஆண்டுதோறும் சுமார் 3 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள பொருட்களை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்கிறது.
முக்கிய ஏற்றுமதிகள்
ஆடை மற்றும் இறப்பர் சார்ந்த பொருட்கள் அமெரிக்காவுக்கான ஏற்றுமதிகளில் மிகப்பெரிய பங்கைக் வகிக்கின்றன.
இதில், இலங்கை ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவுக்கு சுமார் 2 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள ஆடைகளையும் 600–700 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள இறப்பர் பொருட்களையும் ஏற்றுமதி செய்கிறது.
அமெரிக்காவுக்கு மேற்கொள்ளப்படும் ஏனைய முக்கிய ஏற்றுமதிகளில் தேங்காய் சார்ந்த பொருட்கள் மற்றும் மசாலாப் பொருட்கள் அடங்குகின்றன.
இந்தநிலையில், இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை, அமெரிக்க வரிகள் நாட்டின் ஏற்றுமதித் துறைகளில் ஏற்படுத்தக்கூடிய சாத்தியமான தாக்கத்தை மதிப்பிடுவதற்கான ஒரு ஆய்வை ஆரம்பித்துள்ளது. ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் தலைவர் மங்கள விஜேசிங்க இதனை தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |