கிடப்பில் போடப்பட்ட குடிவரவு,குடியகல்வு திணைக்கள சிசிரிவி கமராக்கள்: கோபா குழுவில் அம்பலம்
குடிவரவு மற்றும் குடியகல்வு தலைமை அலுவலகத்தின்(Department of Immigration and Emigration) உள் வளாகத்திற்கு 20 இலட்சம் ரூபாய் செலவில், 2017ஆம் ஆண்டு கொள்வனவு செய்யப்பட்ட சிசிரிவி கருவிகள் கடந்த ஆறு ஆண்டுகளாக பொருத்தப்படாமல் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள், அண்மையில் நாடாளுமன்ற பொது கணக்குகள் குழுவின் (கோபா) முன்னிலையில் அழைக்கப்பட்ட போதே இந்த விடயம் தெரியவந்துள்ளது.
குறித்த உபகரணங்கள் 2017ஆம் ஆண்டு கொள்வனவு செய்யப்பட்டுள்ளன. எனினும் சிசிரிவி கருவிகளை பொருத்துவதற்கு தேவையான, ஏனைய அனைத்து உபகரணங்களும் கொள்வனவு செய்யப்படவில்லை எனவும் தெரியவந்துள்ளது.
கோபா தலைவர் பணிப்புரை
அத்துடன் கொள்முதல் செய்த அதிகாரிகள் தற்போது இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்தநிலையில், பொது பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் தலைமையில் குழுவொன்றை நியமித்து மே 15 ஆம் திகதிக்கு முன்னர் சிசிரிவி கருவிகளை பொருத்தி அதன் முன்னேற்ற அறிக்கையை சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோபா தலைவர் லசந்த அழகியவன்ன பணிப்புரை விடுத்துள்ளார்.
இதேவேளை சிசிரிவி கருவிகளை பொருத்துவதில் சில அதிகாரிகள் தயக்கம் காட்டுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கிடையில் கடந்த நான்கு ஆண்டுகளாக இ-கடவுச்சீட்டுக்களை(E - Paspoart) வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் குறித்தும் நாடாளுமன்ற குழு அதிருப்தி தெரிவித்தது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |