மக்களை மேலும் பாதாளத்திற்குள் தள்ளிவிட்டு பெருமை கொள்ளும் அரசாங்கம்! சாணக்கியன்
சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை மட்டும் வைத்துக் கொண்டு நாட்டினது பொருளாதார நெருக்கடிக்கு நிலையான தீர்வினை காண முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற சர்வதேச நாணய நிதியத்தினது ஒப்பந்தம் மீதான மூன்றாவது நாள் விவாதத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
தமிழர்களின் இனப்பிரச்சினை
மேலும் கூறுகையில், அரசாங்கம் பெருமையாக கூறிக்கொள்வதைப் போல் சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை மட்டும் வைத்துக்கொண்டு நாட்டினது பொருளாதார நெருக்கடிக்கு நிலையான தீர்வினைப் பெற்றுக் கொள்ள முடியாது.
மிக நீண்டகாலமாக எமது நாட்டில் தீர்க்கப்படாதுள்ள இனப்பிரச்சினைக்குத் தீர்வு வழங்கப்பட வேண்டும்.
அதன்மூலமே சர்வதேசம் மற்றும் பெருமளவான முதலீட்டாளர்களின் கவனத்தினைப் பெற முடியும். குறிப்பாக புலம்பெயர் தமிழ் முதலீட்டாளர்கள் இப்பொழுதும் தயாராகவே இருக்கின்றார்கள்.
ஆனால் முதலில் எமது இனப்பிரச்சினைக்கு நிலையானதொரு தீர்வை பெற்றுத் தருவதற்கு அரசாங்கம் முன்வர வேண்டும்.
அவ்வாறு கிடைக்கப் பெறும் பட்சத்தில் எமது வடக்கு கிழக்கு மாகாணங்களை நாம் பொருளாதார கேந்திர மையங்களாக அபிவிருத்தி செய்வதற்கு தயாராக இருக்கின்றோம்.
வரிச்சுமைகள்
ஆனால் அரசாங்கம் இன்னமும் கடனை பெற்று கொள்வதிலேயே குறியாக இருக்கின்றது. அதிலும் சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுவதற்கு முன்னரே நாடாளுமன்றில் அது தொடர்பான விவாதம் முன்னெடுக்கப்பட்டு இருக்க வேண்டும்.
அவ்வாறு இடம்பெற்றிருந்தால் குறித்த ஒப்பந்தம் தொடர்பான நிபந்தனைகளை மறுசீரமைத்து இருக்கலாம். மக்கள் தற்போது அனுபவிக்கின்ற வரிச்சுமைகள் உள்ளிட்ட பாதிப்புக்களைத் தவிர்த்து இருக்கலாம்.
அதனை விடுத்து தற்போது ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு முதல் தவணைக் கடனை பெற்றுக் கொண்டதன் பின்னர் குறித்த ஒப்பந்தம் நாடாளுமன்றத்துக்கு சமர்பிக்கப்பட்டமை பயனற்றது.
அது தொடர்பாக விவாதங்களை நடத்துவதும் வீண்விரயமான செயலாகவே நாம் காண்கின்றோம். அதுவும் மக்கள் பணத்தினை வீணடித்து இவ்வாறு செயற்படுவது தவறான செயலாகும்.
சர்வதேச நாணய நிதியம்
இந்த விவாதத்திற்காக மூன்று நாள் எடுத்துக் கொள்வது பணத்தை வீணடிக்கும் செயலாகும். மேலும் இவ்விடயம் தொடர்பாக சபை முதல்வரும் அமைச்சருமான சுசில் பிரேம ஜயந்த தெரிவித்துள்ள கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது.
அதிலும் சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் விரைவாக முன்னெடுத்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
ஆனால் பொருளாதார நெருக்கடியினை எதிர்கொண்ட பல நாடுகள் 46 நாட்கள் முதல் 100 நாட்களுக்குள் சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பைப் பெற்றுக் கொண்டுள்ளன.
எனினும் நாம் கிட்டத்தட்ட ஏழு மாத காலம் தாமதித்தே சர்வதேச நாணய நிதியத்தின் அனுமதியைப் பெற்றுக் கொண்டோம்.
அனைத்துச் சந்தர்ப்பத்திலும் நாம் சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்வதற்கான பேச்சுவார்த்தை, மற்றும் கடந்த செப்டெம்டபர் மாதம் கைச்சாத்திடப்பட்ட ஊழியர் மட்ட இணக்கப்பாடு குறித்த அறிக்கை ஆகியவற்றை நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிக்குமாறு அரசாங்கத்திடம் பலமுறை வலியுறுத்தி இருந்தோம். எனினும் அரசாங்கம் அதனைப் பொருட்படுத்தவில்லை.
மக்களை மேலும் பாதாளத்திற்குள்
தள்ளிவிட்டு பெருமை கொள்கின்றது இந்த அரசாங்கம்.
புதிய சட்டங்களைக் கொண்டுவரும் அரசாங்கம் எதனையும் நடைமுறைப்படுத்துவதாகத்
தெரியவில்லை.
நடைமுறைப்படுத்தவும் இல்லை. உதாரணமாக வரிக் கொள்கைகளில் திருத்தம் தொடர்பாக நாணய நிதியம் வழங்கிய ஆலோசனைகளை அரசாங்கம் விரைவாகவும் அவசரமாகவும் அமுல்படுத்தியிருந்தது.
ஆனால் அரசாங்கத்தின் நிர்வாகக் கட்டமைப்புக்களில் மறுசீரமைப்பு ஏற்படுத்துவது தொடர்பாக அனைத்தையும் அரசாங்கம் மறந்துவிட்டது.
அத்துடன் ஊழல் ஒழிப்புத் தொடர்பில் நடைமுறைக்கு பொருத்தமான மற்றும் முன்னேற்றகரமான நடவடிக்கைகள் எவையும் எடுக்கப்படவில்லை.
புலம்பெயர் தமிழ் தரப்புக்கள்
சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பையும் கடனையும் மட்டும் வைத்துக் கொண்டு நாட்டினது பொருளாதார நெருக்கடிகளுக்குத் தீர்வினைப் பெற்றுக் கொள்ளவே முடியாது.
தமிழர்களின் இனப்பிரச்சினைக்கு முதலில் தீர்வினைப் பெற்றுத் தாருங்கள் நாம் வடக்கு, கிழக்கு மாகாணங்களை நாட்டினது பொருளாதார கேந்திர நிலையங்களாக மாற்றிக் காட்டுகின்றோம்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதற்குத் தயாராகவே
இருக்கின்றது.
மேலும் இந்த விடயத்தில் புலம்பெயர் தமிழ் தரப்புக்கள் என்றும் தயாராகவே இருக்கின்றன.
ஆனால் அதற்கு முன்னர் மிக நீண்டகாலமாகவே தொடரும் எமது
இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்க்கமான முடிவு காணப்பட வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்.