இனிக் கடன் எடுப்பதற்கு இடமும் இல்லை; விற்பதற்கும் பொருளும் இல்லை - ஜே.வி.பி. தெரிவிப்பு
இனிக் கடன் எடுப்பதற்கு இடமும் இல்லை. விற்பதற்கும் பொருளும் இல்லை. நாடு முன்னேறுவதற்கு வாய்ப்பில்லை, மேலும் அழிவை நோக்கியே நாடு செல்கின்றது என ஜே.வி.பியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
நாட்டின் உண்மை நிலை தெரிந்தவர்கள் அறிவார்கள் நாடு மேலும் பின்னோக்கிச் செல்லப்போகின்றது என்று. இருப்பதைவிட பெரிய பிரச்சினைகள் வரப்போகின்றன என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
.
அரச நிறுவனங்களை விற்றல்
இதுவொரு இடைவேளை. கடனை அடைப்பதற்கு மேலும் கடன் வாங்குதல், அரச நிறுவனங்களை விற்றுக் கடனை அடைத்தல் போன்றவை நாட்டை முன்னேற்றுவதற்கு உதவாது.
இருக்கின்ற கடைசி சொத்தையும் விற்று கடன் வாங்கும் இடம்தான் ஐ.எம்.எப். இப்போது இந்த ஆட்சியாளர்கள் அங்கும் கடன் வாங்கிவிட்டார்கள்.
அதற்கு அப்பால் என்ன செய்வது? ஒரு டொலரையாவது மேலதிகமாகச் சம்பாதிப்பதற்கான வேலைத்திட்டம் அரசிடம் இல்லை.
[NCFKTD
அரச நிறுவனங்களை விற்றுப் பணம் தேடும் நிலைப்பாட்டில் மட்டும் தான் அரசு ஈடுபட்டுள்ளது. அது மட்டும் தான் அரசிடம் இருக்கும் ஒரேயொரு திட்டம்.
இனிக் கடன் எடுப்பதற்கு இடமும் இல்லை. விற்பதற்கும் பொருளும் இல்லை. நாடு முன்னேறுவதற்கு வாய்ப்பில்லை. மேலும் அழிவை நோக்கியே நாடு செல்கின்றது.
மக்களின் நுகர்வு குறைந்துள்ளது
மக்களின் நுகர்வு குறைந்துள்ளது. இதனால் பொருட்களின் இறக்குமதி குறைந்துள்ளது. இதனால் கொஞ்சம் டொலர் மிஞ்சியுள்ளது.
இதை வைத்துக்கொண்டு நாடு நல்ல நிலைமையை அடைந்துள்ளது என்று சொல்ல முடியுமா? இப்படியே நாட்டைக் கொண்டு செல்ல முடியுமா? மக்கள் விரும்பிய பொருட்களை விரும்பியவாறு வாங்க முடியாமல் பயந்து பயந்து வாங்குவது பொருளாதார முன்னேற்றமா?
சாப்பாட்டு பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதால் அதன் கொள்வனவு குறைந்துள்ளது.
மக்கள் சாப்பிடுவதைக் குறைத்துள்ளனர்.
எரிபொருள் விலை அதிகரிப்பு
எரிபொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதாலும் கோட்டா முறையின் கீழ் எரிபொருள் வழங்கப்படுவதாலும் மக்கள் தேவையான அளவு மாத்திரமே எரிபொருள் வாங்குகின்றனர்.
சுற்றுலா செல்வதில்லை, தூர இடங்களுக்குச் செல்வதில்லை. இதனால் பெற்றோல் வரிசை இல்லை.
இதெல்லாம் மேலோட்டமாகப் பார்க்கும்போது நிலைமை சரி வந்துவிட்டது போல்
தெரிகின்றது. ஆனால், உண்மை அதுவல்ல. நிலைமை மேலும் மோசமடையும் என அவர் தெரிவித்துள்ளார்.