ரணில் அரசாங்கத்திற்கு மகிழ்ச்சி கொடுத்த சர்வதேச நாணய நிதியம்! சற்று முன்னர் வெளியானது அறிவிப்பு
இலங்கைக்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையில் செயற்குழு உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியம் சற்று முன் இந்த விடயத்தை அறிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதிய பணியாளர்களும் இலங்கை அதிகாரிகளும் இந்த உடன்பாட்டை எட்டியுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது.
சுமார் 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்களின் விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் கீழ் 48 மாத ஏற்பாட்டுடன் இலங்கையின் பொருளாதாரக் கொள்கைகளை ஆதரிப்பதற்கான பணியாளர் மட்ட உடன்பாடே எட்டப்பட்டுள்ளது.
இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் கடன் நிலைத்தன்மையை மீட்டெடுப்பது அதே நேரத்தில் நிதி ஸ்திரத்தன்மையைப் பாதுகாத்தல், பாதிக்கப்படக் கூடியவர்களை பாதுகாத்தல் மற்றும் ஊழல் பாதிப்புகளை நிவர்த்தி செய்வதற்கான கட்டமைப்பு சீர்திருத்தங்களை முடக்கி விடுதல் மற்றும் இலங்கையின் வளர்ச்சி திறனை வெளிப்படுத்துதலுக்காக இந்த நிதி பயன்படுத்தப்படவுள்ளது.
சர்வதேச நாணய நிதிய குழுவின் இலங்கை விஜயம்
சர்வதேச நாணய நிதியத்தின் பீட்டர் ப்ரூயர் மற்றும் மசாஹிரோ நோசாகி ஆகியோர் தலைமையிலான குழுவினர், 2022 ஆகஸ்ட் 24 முதல் செப்டெம்பர் வரை இலங்கை மற்றும் சர்வதேச நாணய நிதியத்திற்கான ஆதரவு குறித்த பேச்சுவார்த்தைகளுக்காக கொழும்புக்கு விஜயம் செய்தது.
இந்த நிலையில் இலங்கையுடன் உடன்பாடு எட்டப்பட்ட செய்தியை மெசர்ஸ் ப்ரூயர் மற்றும் நோசாகி ஆகியோர் அறிக்கையாக வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி பதவியிலிருந்து விலகியதையடுத்து ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பொறுப்பேற்றிருந்தார்.
இதனை தொடர்ந்து நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமை தொடர்பான உண்மை நிலவரங்களை மக்களுக்கு அடுத்தடுத்து தெரியப்படுத்தி வந்ததுடன், நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்கான அதிரடி நடவடிக்கைகளையும் முன்னெடுத்திருந்தார்.
இந்த நிலையில் பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டு வந்திருந்தது.
இவ்வாறானதொரு சூழ்நிலையிலேயே ரணில் அரசாங்கத்திற்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில் சர்வதேச நாணய நிதியம் எட்டப்பட்டுள்ள உடன்பாடு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.