சர்வதேச நாணய நிதிய நிபந்தனைகளை நிறைவேற்ற தவறிய இலங்கை
வெரிடே ஆய்வின், ‘ஐஎம்எஃப்' தொடர்பான பெப்ரவரி புதுப்பிப்பின்படி, இலங்கை தனது சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தில் 2024 பெப்ரவரி இறுதிவரை 33 வீத கடப்பாடுகளை நிறைவேற்றத் தவறியுள்ளது.
இதில், வெளிப்படைத்தன்மை மற்றும் நிர்வாகத்தை மேம்படுத்தும் சட்டத்தை நிறைவேற்றுவது தொடர்பான உறுதிப்பாடுகளும் அடங்குவதாக ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், இலங்கையின் பொருளாதார நெருக்கடியின் மையமாக மோசமான நிர்வாகத்தை சர்வதேச நாணய நிதியம் அடையாளம் கண்டுள்ளது.
இந்நிலையில், சர்வதேச நாணய நிதியத்தின் தலைமையிலான, ஆளுகை கண்டறியும் மதிப்பீட்டைக் கொண்ட முதல் ஆசிய நாடாக இலங்கை கருதப்படுகிறது.
நிறைவேற்ற வேண்டிய உறுதிமொழிகள்
குறித்த ஆய்வின்படி, சர்வதேச நாணய நிதியத்தின் 36 வீத பொறுப்புகளின் நிலை 'தெரியாதது' என வகைப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது அவற்றின் முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்கு போதுமான தரவு கிடைக்கவில்லை.
எனினும், பெப்ரவரி இறுதிக்குள் 31வீத உறுதிப்பாடுகள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்று வெரிடே ஆய்வு கூறியுள்ளது.
சர்வதேச நாணயத் திட்ட நிதியின் இரண்டாம் சுற்று, டிசம்பர் 2023இல் ஆரம்பமான நிலையில், புதுப்பிக்கப்பட்ட ஒப்பந்தத்தின் கீழ், 2024 பெப்ரவரி இறுதிக்குள் இலங்கை 45 உறுதிமொழிகளை நிறைவேற்றியிருக்க வேண்டும்.
எனினும், இவற்றில் 14 உறுதிமொழிகள் (31வீதம்) நிறைவேற்றப்பட்டுள்ளன என்றும் 15 உறுதிமொழிகள் (33வீதம்) நிறைவேற்றப்படவில்லை என்றும், 16 உறுதிமொழிகள் (36வீதம்) 'தெரியாதது’ என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளது.
நிர்வாகச் சிக்கல்
நிறைவேற்றப்படாத 15 உறுதிமொழிகளில், ஆறு தகவல்களை வெளியிடுவதில் உள்ளதோடு நான்கு புதிய சட்டங்களை ஏற்றுக்கொள்வது தொடர்பான நடவடிக்கைகளில் தொடர்புப்பட்டுள்ளன.
வங்கிச் சட்டத்தின் மீது நாடாளுமன்ற அனுமதியைப் பெறுதல், பணவீக்கத்திற்கு மது வரிகளின் தானியங்கி குறியீட்டை அறிமுகப்படுத்துதல், கடன் மேலாண்மை நிறுவனத்தை அமைப்பதற்கான சட்ட மாற்றத்தை ஏற்படுத்துதல் மற்றும் பொது நிதி மேலாண்மை சட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தல் என்பனவே அந்த நான்கு நடவடிக்கைகளாகும்.
நிர்வாகச் சிக்கல்களைத் தீர்ப்பதை நோக்கமாகக் கொண்ட இந்த நான்கு நடவடிக்கைகளும் செப்டம்பர் 2022இல் சர்வதேச நாணய நிதியப் பணியாளர்கள் அளவிலான ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டாலும் அவை புறக்கணிக்கப்பட்டுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |