யாழில் உணவக இடிப்பு சர்ச்சை : பொலிஸார் அளித்துள்ள விளக்கம்
யாழ்ப்பாணத்தில் இயங்கி வந்த “மாத்தறை அம்புல (Matara Ambula)” உணவகத்தின் ஒரு பகுதி இடித்து அகற்றப்பட்ட சம்பவம் தொடர்பாக இலங்கை பொலிஸார் விளக்கமளித்துள்ளனர்.
சமூக வலைத்தளங்களில் பரவிய காணொளியைத் தொடர்ந்து, பொலிஸார் வெளியிட்ட அறிக்கையில், நீதிமன்ற உத்தரவின் அடிப்படையிலேயே இந்த இடிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநகர சபை முறைப்பாடு
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
சிங்களக் குடும்பம் ஒன்றினால் நடத்தப்பட்டு வந்த இந்த உணவகம், யாழ்ப்பாணம் பிரதான வீதியில் இலக்கம் 103 என்ற முகவரியில் உள்ள வாடகைக் கட்டிடத்தில் சுமார் ஐந்து ஆண்டுகளாக இயங்கி வந்துள்ளது.

எனினும்,கட்டிடத்தின் ஒரு பகுதி வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு (RDA) சொந்தமான காணியில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நிர்மாணம் பிரதான வீதிக்கு இடையூறாக இருந்துள்ளது. இதனை அகற்றுமாறு ஆரம்பத்தில் அறிவுறுத்தப்பட்ட போதிலும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
நீதிமன்ற உத்தரவு
இதனையடுத்து, 2025 மே 2ஆம் திகதி வீதி அபிவிருத்தி அதிகார சபை, யாழ்ப்பாணம் மாநகர சபையில் முறைப்பாடு செய்துள்ளது. இந்த நிலையில், கட்டிட உரிமையாளருக்கு சட்டவிரோத நிர்மாணத்தை அகற்றுமாறு மாநகர ஆணையாளர் இரண்டு அறிவித்தல்களை அனுப்பியிருந்தார். எனினும், உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதனை தொடர்ந்து, 2026 ஜூலை 9ஆம் திகதி யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம், சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட பகுதியை அகற்றுமாறு கட்டிட உரிமையாளருக்கு உத்தரவிட்டது.
அனுமதியற்ற நிர்மாணம்
அந்த உத்தரவைப் பின்பற்றத் தவறினால், மாநகர சபையே குறித்த பகுதியை அகற்றுவதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது.
இதன்படி, கடந்த நவம்பர் 25ஆம் திகதி யாழ்ப்பாணம் மாநகர சபை அதிகாரிகள் குறித்த கட்டிடத்தின் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட பகுதியை இடித்து அகற்றியுள்ளனர். இந்த நடவடிக்கை உணவகத்தை நடத்தும் குடும்பத்தின் இன அடையாளம் காரணமாக மேற்கொள்ளப்பட்டதல்ல. வீதி அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமான காணியில் மேற்கொள்ளப்பட்ட அனுமதியற்ற நிர்மாணம் தொடர்பான நீதிமன்ற உத்தரவின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Bigg Boss 10: கண்ணீருடன் உள்ளே வந்த முனியம்மாவிற்கு கொடுத்த முத்தம்! வெட்கத்தில் லக்ஷ்மி பிரியா Manithan