மைத்திரிபாலவால் பாதுகாக்கப்பட்ட முக்கிய குற்றவாளிகள்.. அநுர அரசிற்கு கொடுக்கப்படும் அழுத்தம்
ஜனாதிபதியின் பொதுமன்னிப்பு தொடர்பான கோரிக்கைகளைக் கையாள்வதற்குத் தெளிவான வழிமுறையொன்றை உருவாக்குமாறு சிவில் சமூக அமைப்புகள் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன.
பிரகீத் எக்னெலிகொட காணாமல் போனமை தொடர்பான வழக்கு விசாரணைகளின் போது நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்திற்காக, பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு 2018 ஒகஸ்டில் மேல்முறையீட்டு நீதிமன்றம் 6 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்தது.
2019ஆம் ஆண்டில், அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி பொதுமன்னிப்பு செல்லாது என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.
பொது மன்னிப்பு
இந்நிலையில், இது தொடர்பில் நடவடிக்கை எடுப்பதில் தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் தாமதம் காட்டுவதாக சிவில் சமூக அமைப்புகளின் சார்பில் காமினி வியாங்கொட கடுமையாக விமர்சித்தார்.

முன்னாள் ஜனாதிபதிகள் தண்டனை பெற்ற குற்றவாளிகளை சிறையிலிருந்து விடுவிக்கத் தங்களது நிறைவேற்று அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதாக அவர் சுட்டிக்காட்டினார்.
மைத்திரிபால சிறிசேன, தன்னிச்சையாகச் செயல்பட்டுள்ளார் என்றும், தமது நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கு முன்னர் அது தொடர்பான விடயங்களைச் சுயாதீனமாகப் பரிசீலிக்கத் தவறிவிட்டார் என்றும் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதை வியாங்கொட சுட்டிக்காட்டினார்.
2019 மே மாதத்தில் எந்த அடிப்படையில் மைத்திரிபால சிறிசேன, ஞானசார தேரரை விடுவித்தார் என்பதை அறியும் உரிமை, தேரரின் செயற்பாடுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உண்டு எனவும் அவர் கூறினார்.
ஞானசார தேரர்
இந்நிலையில், மேல்முறையீட்டு நீதிமன்றம் நேற்று முன்தினம், (05) தேரருக்கு விதிக்கப்பட்ட எஞ்சிய சிறைத்தண்டனையை நடைமுறைப்படுத்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது. திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த ஞானசார தேரர், சிறைச்சாலை அதிகாரிகளால் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்டார்.

சமர்ப்பணங்களைப் பரிசீலித்த மேல்முறையீட்டு நீதிமன்றம், ஞானசார தேரருக்கு விதிக்கப்பட்ட தண்டனையின் எஞ்சிய காலத்தைச் செயல்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திற்கு உத்தரவிட்டது.
முன்னதாக, பொலிஸார் சனிக்கிழமை (03) களுத்துறையிலுள்ள ஆரண்ய சேனாசனமொன்றில் வைத்து தேரரைக் கைது செய்திருந்தனர். ஞாயிற்றுக்கிழமை (04) கொழும்பு நீதவான் நீதிமன்றம் தேரரை திங்கட்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டிருந்தது.
பல ஆண்டுகளாக நடைமுறைப்படுத்தப்பட்ட ஜனாதிபதி பொதுமன்னிப்புகள் குறித்து ஆராய்ந்தால், அடுத்தடுத்து வந்த தலைவர்கள் தங்களுக்கு நெருக்கமானவர்களைப் திருப்திப்படுத்துவதற்காக நிறைவேற்று அதிகாரத்தை எவ்வாறு சுரண்டினார்கள் என்பது தெரியவரும் என்று வியாங்கொட கூறுகின்றார்.
ஜூட் ஷ்ரமந்த ஜயமஹா
வியாங்கொட, ஜனாதிபதித் தேர்தலுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்னர், 2019 செப்டம்பரில் ஜூட் ஷ்ரமந்த ஜயமஹாவுக்கு மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கியதை நினைவூட்டினார்.

ஜூட் ஷ்ரமந்த ஜயமஹாவுக்கு மேல்நீதிமன்றம் 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்த போதிலும், மேல்முறையீட்டு நீதிமன்றம் ஜூலை 2012 இல் அத்தண்டனையை மரண தண்டனையாக உயர்த்தியதுடன், அதனை உயர்நீதிமன்றமும் உறுதி செய்தது.
குறித்த ஜனாதிபதியின் நடவடிக்கை சட்டவிரோதமானது மற்றும் தன்னிச்சையானது என உயர்நீதிமன்றம் ஜூன் 2024 இல் அறிவித்த போதிலும், நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த சட்ட அமலாக்க அதிகாரிகள் இதுவரை காத்திரமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என வியாங்கொட குற்றஞ்சாட்டினார்.
வரையறுக்கப்பட்ட நடைமுறைகளைப் பின்பற்றாமல் எந்தவொரு ஜனாதிபதியும் குற்றவாளி ஒருவருக்கு மன்னிப்பு அளிக்கும் உரிமையைப் பயன்படுத்தக்கூடாது என்று வியாங்கொட வலியுறுத்தினார்.