மாந்தை இளைஞர்களால் முற்றுகையிடப்பட்ட கசிப்பு உற்பத்தி நிலையம்
மன்னார்(Mannar) - மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள காய நகர் கிராம சேவையாளர் பிரிவு ஈச்சளவக்கை கிராமத்தின் மேற்கொள்ளப்பட்டுவந்த கசிப்பு உற்பத்தியானது பிரதேச இளைஞர்களால் முற்றுகையிடப்பட்டுள்ளது.
குறித்த பிரதேசத்தில் அமைந்துள்ள காட்டுப்பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி தொடர்ச்சியாக நடைபெற்று வந்த நிலையிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
மன்னார் -மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள காய நகர் கிராம சேவையாளர் பிரிவு ஈச்சளவக்கை கிராமத்தின் காட்டுப்பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி தொடர்ச்சியாக நடைபெற்று வந்துள்ளது.
இளைஞர்களின் அதிரடியான முடிவு
இந்தநிலையில் பொலிஸ்மா அதிபரின் சிந்தனைக்கு அமைய ஈச்சளவக்கை கிராமத்தின் ஊடகவியலாளர் ஒருவர் உள்ளடங்களாக இளைஞர்கள் அதிரடியான முடிவை எடுத்து நேற்று (31) அப்பகுதியில் கசிப்பு உற்பத்தி செய்யும் குளத்தின் வாய்க்கால் பகுதியில் இறங்கி தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
இதன் போது கசிப்பு உற்பத்தியாளர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.
கசிப்பு உற்பத்தி பொருட்கள் இரவாகியும் அவ்விடத்தில் இருந்த நிலையில் குறித்த குழுவினரால் மீட்கப்பட்ட சட்டவிரோத மதுபானங்களை அடம்பன் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
மேலும் அவ்விடத்தில் கசிப்பு உற்பத்தி வேலையில் ஈடுபடும் இருவர் தாம் மேலும் சட்டவிரோத மது உற்பத்தியை முன்னெடுக்க உள்ளதாகவும் பிடிக்க முடிந்தால் பிடித்து பார்க்கட்டும், பிடித்து கொடுத்தவர்களுக்கு தாக்குவதாகவும் எச்சரித்துள்ளதாக இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் விசாரணையை மேற்கொண்ட பொலிஸார் அவர்களை கைது செய்துள்ளனர்.
குறித்த பிரதேசத்தில் சட்டவிரோத செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றமையினால் இளைஞர்கள் சிறுவர்கள் பாடசாலை செல்லாது கசிப்பு மாபியாக்களுக்கு அடிமையாக உள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |