அரிசி என்ற போர்வையில் கடத்தப்படவிருந்த பீரங்கி வெற்றுத் தோட்டாக்கள்
அரிசி என்ற போர்வையில் கடத்தப்படவிருந்த பீரங்கி வெற்றுத் தோட்டாக்களை, மீட்டுள்ளதுடன் சந்தேக நபர் ஓருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
போர்க் காலத்தில் இராணுவத்தால் பயன்படுத்தப்பட்டு கைவிடப்பட்ட 196 பீரங்கி வெற்றுத் தோட்டாக்களை அரிசி ஏற்றுமதி எனும் போர்வையில் சட்டவிரோதமாக இந்தியாவுக்குக் கடத்த முயற்சிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பொருட்கள் அடங்கிய கொள்கலன் ஒன்றை கொழும்பு துறைமுகத்தில் வைத்து மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் கைப்பற்றியுள்ளது.

மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரன்மல் கொடித்துவக்கு மற்றும் பிரதி பொலிஸ் மா அதிபர் சந்தன கொடித்துவக்கு ஆகியோரின் நேரடி மேற்பார்வையில் இந்த சோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த வெற்றுத் தோட்டாக்கள் ஏலம் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு, பழைய இரும்புகளை ஏற்றுமதி செய்வதாகக் கூறி இந்தியாவுக்கு அனுப்பத் திட்டமிடப்பட்டிருந்தது.
இராணுவத்தால் பயன்படுத்தப்பட்டு வீசப்பட்ட பீரங்கி வெற்றுத் தோட்டாக்களை இவ்வாறு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது முற்றிலும் சட்டவிரோதமானது என புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பிரதி பொலிஸ் மா அதிபர் சந்தன கொடித்துவக்குவுக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையிலேயே இந்தச் சோதனை நடத்தப்பட்டு கொள்கலனுடன் சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதற்கு முன்னரும் இதே முறையில் 3 கொள்கலன்களில் பீரங்கி வெற்றுத் தோட்டாக்கள் இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த கடத்தல் கும்பலுடன் தொடர்புடைய ஏனைய நபர்களைக் கைது செய்வதற்காக பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.