சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் சுற்றிவளைப்பு - பெண் உட்பட இருவர் கைது..!
அம்பாறை - பக்கிஎல்லை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவகிரிஆறு வனப் பகுதியில் சட்டவிரோதமாக இயங்கி வந்த பாரிய சட்டவிரோதமான மதுபான உற்பத்தி நிலையம் ஒன்றை பொலிஸார் அதிரடியாக முற்றுகையிட்டுள்ளனர்.
இந்த நடவடிக்கையின் போது, ஆணொருவரும், பெண்ணொருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இந்த சோதனை முன்னெடுக்கப்பட்டது.
சட்டவிரோதமாக மதுபானம் உற்பத்தி செய்த பெண்
இதன்போது, 7,500 மி.லீ சட்டவிரோத மதுபானம், 148,000 மி.லீ கோடா, மதுபான உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் செம்புச் சுருள்கள் மற்றும் பீப்பாய்கள் உள்ளிட்ட பல உபகரணங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவர்கள் குறித்த காட்டுப் பகுதியில் தற்காலிகமாக வசித்து வந்தவர்கள் எனக் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்கள் இருவரும் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், பூர்வாங்க விசாரணைகளின் பின்னர் ஆகஸ்ட் 20 ஆம் திகதி அம்பாறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.