சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தை குறித்த செய்திகளை மறுக்கும் அரசாங்கம்
சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவாா்த்தைகள் தொடர்பில் சில ஊடக நிறுவனங்கள் பிழையான செய்திகளை வெளியிட்டு வருவதாக அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் 7வது மதிப்பாய்வுக்கு முன்னதாக நடத்தப்பட்ட அதிகாரிகள் மட்ட பேச்சுவார்த்தைகள் குறித்து சில ஊடகங்கள் தவறான விளக்கங்களை அளித்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது.
நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.

குறிப்பிட்ட கடன் திட்டத்தின் கீழ் 7வது தவணையை விடுவிப்பதற்கான மதிப்பாய்வுக்கு முன்னதாக நடத்தப்பட்ட அதிகாரிகள் மட்டக் கூட்டத்தை, 7வது தவணையை விடுவிப்பதற்கான "இறுதிப் பேச்சுவார்த்தை சுற்று" என சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளதாக பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது, குறித்த விரிவாக்கப்பட்ட கடன் வசதி திட்டத்தின் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் தெளிவான தொழில்நுட்ப செயல்முறை பற்றிய புரிதல் இன்மையால் அல்லது மக்கள் மத்தியில் தவறான புரிதலை ஏற்படுத்தி அரசாங்கத்தை அசௌகரியத்திற்கு உள்ளாக்கும் நோக்கில் செய்யப்பட்ட முயற்சியாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு காரணிகளால் நாடு சந்தித்த பொருளாதார பின்னடைவிலிருந்து பொருளாதாரத்தை மீட்டு, கடந்த இரண்டு ஆண்டுகளில் உள்நாட்டு வருவாயை ஈட்டவும், அத்தியாவசிய இறக்குமதிகளுக்குத் தேவையான வெளிநாட்டு கையிருப்பைத் திரட்டவும் அரசாங்கம் வெற்றி பெற்றுள்ளதாக பிரதி அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.
இதன் பலன்கள் மக்களுக்குக் கிடைக்கத் தொடங்கியுள்ள நிலையில், அதனை மேலும் விரிவுபடுத்துவதைத் தடுக்கும் வகையில் மக்களை திசை திருப்பும் செய்திகளை பொறுப்பற்ற முறையில் பரப்புவது நாட்டிற்குச் செய்யும் தீங்காகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் 7வது தவணை தொடர்பான மதிப்பாய்வுக்கு முன்னதான அதிகாரிகள் மட்டப் பேச்சுவார்த்தை சுற்று, சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள், நிதி அமைச்சு மற்றும் மத்திய வங்கி அதிகாரிகளின் பங்கேற்புடன் கடந்த 10 ஆம் திகதி முதல் 23 ஆம் திகதி வரை கொழும்பில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.