ஹரக் கட்டா'வை சிறைக்குள் படுகொலை செய்ய சதி: மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு!
பிபல பாதாள உலகக் குழு தலைவரான "ஹரக் கட்டா" என்ற நதுன் சிந்தக விக்கிரமரத்னவை சிறையில் வைத்து படுகொலை செய்ய சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் அவரது தந்தையான நெல்சன் மெர்வின் விக்ரமரத்ன இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் அவசர முறைப்பாடு ஒன்றைச் செய்துள்ளார்.
மனித உரிமைகள் ஆணைக்குழுவின் செயலாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், தனது மகன் தற்போது வெலிசர கடற்படை முகாமில் உள்ள 10 செல்கள் கொண்ட தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அங்கு கெஹெல்பெத்தர பத்மே, பாக்கோ சமன் மற்றும் பாணந்துறை நிலங்க ஆகிய அவரது எதிரி பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த மூவரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் நீதிமன்ற வளாகத்திற்குள்ளேயே தனது மகனைக் கொல்ல முயன்றதாக முன்னர் குற்றம் சாட்டப்பட்டவர்கள் என்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த 22 ஆம் திகதி தனது மகனுக்கும் பத்மேவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக வெளியான ஊடக செய்திகளைப் பொய் என மறுத்துள்ள நெல்சன், இந்த போலியான சம்பவத்தை காரணமாகக் கொண்டு தனது மகனை திட்டமிட்டு படுகொலை செய்ய முயற்சி நடக்கலாம் என கவலை வெளியிட்டுள்ளார்.
மேலும், தனது மகன் முழங்கால் காயத்தினால் பாதிக்கப்பட்டு ஊன்றுகோல் உதவியுடன் நடப்பதாகவும், அவரது உடல் ஆரோக்கிய நிலை மிகவும் மோசமடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தனது மகனின் உயிருக்கு எழுந்துள்ள அச்சுறுத்தலானது, அரச அதிகாரிகளின் பரவலான ஊழல்களை வெளிப்படுத்த அவர் தயாராக இருப்பதே காரணம் என தந்தை குற்றம் சாட்டியுள்ளார்.
ஹரக் கட்டாவைப் பாதுகாப்பதாகக் கூறி இரண்டு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் அதிபர்கள் மற்றும் ஆறு பிரதிப் பொலிஸ் அதிபர்கள் கோடிக்கணக்கான ரூபாய்களைக் கப்பமாகப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான தகவல்கள் பிரதிப் பொலிஸ் அதிபர் ஷானி அபேசேகரவுக்கும் ஜனாதிபதிக்கும் ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.
குற்றப்புலனாய்வுத் துறை மற்றும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு ஆகியவற்றால் 36 மாதங்களுக்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டு, 26,000 மணித்தியாலங்களுக்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்ட போதிலும், போதைப்பொருள் கடத்தல் அல்லது பாரிய குற்றங்கள் தொடர்பாக தனது மகனுக்கு எதிராக எந்தவொரு புதிய வழக்கையும் அதிகாரிகளால் தாக்கல் செய்ய முடியவில்லை என அக் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தற்போது அவருக்கு எதிராக நிலுவையில் உள்ள ஒரே போதைப்பொருள் வழக்கு 2018 ஆம் ஆண்டில், 12 கிராம் போதைப்பொருள் தொடர்பானது மட்டுமே என்றும் கூறப்பட்டுள்ளது.
எனவே, தனது மகனின் வாழ்வுரிமையைப் பாதுகாக்கவும், சட்டவிரோத ஆபத்துகளிலிருந்து அவரைக் காப்பாற்றி உரிய சட்ட நடைமுறையை உறுதி செய்யவும் உடனடியாக தலையிடுமாறு மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் ஹரக் கட்டாவின் தந்தை நெல்சன், அவசரக் கோரிக்கை விடுத்துள்ளார்.
சரவணன் பற்றி அஞ்சலிக்கு தெரிய வந்த உண்மை, இனி நடக்கப்போவது என்ன?... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam