புலிபாய்ந்த கல்லில் கடற்றொழிலாளர்கள் சிலரால் சட்டவிரோத செயற்பாடு!
முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் புலிபாய்ந்த கல் சுற்றுலா ஒதுக்கிடத்தில் பெரும்பான்மை இன கடற்றொழிலாளர்கள் சிலர் சட்டவிரோதமான முறையில் மீனவ வாடி அமைத்துள்ளதுடன், கடற்கரையில் சட்டவிரோதமாக படகுகளையும் நிறுத்தியுள்ளனர்.
இந்நிலையில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் நிலமைகளை நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
அத்துடன், இத்தகைய சட்டவிரோத செயற்பாடுகளுக்கெதிராக உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உரியதரப்பினரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.
சட்டவிரோத செயற்பாடு
இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில், முல்லைத்தீவு - கரைதுறைப்பற்று பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட கொக்குத்தொடுவாய், புலிபாய்ந்த கல்லில் சுற்றுலாத் தலத்திற்கென ஒதுக்கப்பட்ட பகுதியில் பெரும்பான்மை இன கடற்றொழிலாளர்கள் சிலர் அத்துமீறி சட்டவிரோதமான முறையில் வாடி அமைக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளது.

இதன்போது புலிபாய்ந்த கல்லில் சுற்றுலாத் தலத்திற்கென ஒதுக்கப்பட்டுள்ள கடற்கரையை அண்டிய காட்டுப் பகுதியில் சட்டவிரோதமாக பெரும்பான்மை இன கடற்றொழிலாளர்கள் சிலரால் மறைவான வகையில் வாடி அமைக்கப்பட்டிருப்பது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களால் கண்டறியமுடிந்துள்ளது.
அத்தோடு OFFRP-A-0742MLT, OFFRP-A-1000MLT, OFFRP-A-0974MLT ஆகிய முல்லைத்தீவு மாவட்டத்தின் பதிவிலக்கங்களைக்கொண்ட மூன்று படகுகளும், OFFRP-A-5017NBO, OFFRP-A-4478NBO ஆகிய நீர்கொழும்பு மாவட்டத்தின் பதிவிலக்கங்களையுடைய இரு படகுகளும், OFFRP-A-5491CHW, OFFRP-A-7209CHW ஆகிய சிலாபம் மாவட்டத்தின் பதிவிலக்கங்களைக் கொண்ட இருபடகுகளுமாக மொத்தம் ஏழு படகுகள் சட்டவிரோதமானவகையில் புலிபாஞ்சகல் கடற்கரையில் பெரும்பான்மை இன கடற்றொழிலாளர்கள் சிலரால் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதையும் நாடாளுமன்ற உறுப்பினரால் இனங்காண முடிந்துள்ளது.
இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் உடனடியாக குறித்த பகுதிக்குரிய கிராம அலுவலர் மற்றும் கரைதுறைப்பற்று பிரதேசசெயலக காணிஉத்தியோகத்தர் உள்ளிட்டவர்களுக்கு இந்த விடயங்களைத் தெரியப்படுத்தியதையடுத்து, குறித்த பகுதிக்கு அவர்களும் உடனடியாக வருகை தந்திருந்தனர்.
இந்நிலையில் இந்த சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு நடவடிக்கை எடுக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் வலியுறுத்தியிருந்தார். அதற்கமைய இந்த சட்டவிரோத நடவடிக்கைகளுக்கெதிராக தம்மால் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென குறித்த பகுதிக்குரிய கிராம அலுவலர், கரைதுறைப்பற்று காணி உத்தியோகத்தர் ஆகியோரால் நாடாளுமன்ற உறுப்பினரிடம் தெரிவித்திருந்தனர்.
சட்டநடவடிக்கை
அதன் பிற்பாடு கரைதுறைப்பற்று பிரதேச செயலாளரிடமும் தெரியப்படுத்தப்பட்ட நிலையில் அவரும் இதுகுறித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.
அதேவேளை முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் அருளானந்தம் உமாமகேஸ்வரனையும் நேரடியாகச் சந்தித்து இந்த சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் தெரியப்படுத்தியதுடன், இந்த சட்டவிரோத செயற்பாடுகளுக்கு எதிராக உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டுமெனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் வலியுறுத்தியிருந்தார்.
அந்தவகையில் குறித்த புலிபாஞ்சகல் பகுதியென்பது சுற்றுலாத் தலத்திற்கென ஒதுக்கப்பட்ட பகுதியெனவும், அங்கு இவ்வாறான செயற்பாடுகளை அனுமதிக்கமுடியாதெனவும் தெரிவித்த மாவட்ட செயலாளர், குறித்த சட்டவிரோத செயற்பாடுகளுக்கெதிராக உரியவகையில் சட்டநடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென நாடாளுமன்ற உறுப்பினரிடம் தெரிவித்திருந்தார்.
மேலும் குறித்த புலிபாஞ்சகல் சுற்றுலா ஒதுக்கிடத்தில் இதற்கு முன்னரும் பலதடவைகள் பெரும்பான்மை இன கடற்றொழிலாளர்கள் சிலர் இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்த நிலையில் அச்செயற்பாடுகள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களது தலையீட்டை அடுத்து, உரிய சட்டநடவடிக்கைகளூடாகத் தடுத்து நிறுத்தப்பட்டிருந்தன.
இத்தகைய சூழலில் மீண்டும் குறித்த சுற்றுலாத்தலத்தில் இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகளில் பெரும்பான்மை இன சிலர் கடற்றொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.




